நவிமும்பையில் மின்சார ரெயில் தடம்புரண்டு விபத்து
நவிமும்பையில் மின்சார ரெயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது.;
மும்பை,
நவிமும்பையில் மின்சார ரெயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது.
தடம்புரண்ட ரெயில்
நவிமும்பையில் நெருல் - கார்கோபர் இடையே சீவுட் தாரவே, பேலாப்பூர், பாமன்டோங்கி வழியாக மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது. நேற்று காலை பேலாப்பூரில் இருந்து கார்கோபருக்கு மின்சார ரெயில் சென்றது. காலை 8.45 மணிக்கு மின்சார ரெயில் கார்கோபர் ரெயில் நிலையப்பகுதிக்குள் நுழைந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக ரெயில் தடம்புரண்டது.
மோட்டர் மேன் கேபின் உள்பட முன் பகுதியில் உள்ள 3 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்டன. ரெயில் வேகம்குறைவாக சென்றதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ரெயிலில் இருந்த பயணிகளும் அதிர்ஷடவமாக காயமின்றி உயிர் தப்பினர்.
மீட்பு பணிகள் தீவிரம்
தகவல் அறிந்து ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் விரைந்து சென்றனர். மீட்பு ரெயிலும் வந்தது. மீட்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருவதாக மத்திய ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி சிவாஜி சுதர் தகவல் வெளியிட்டு உள்ளார். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விபத்து காரணமாக நேற்று நெருல்- கார்கோபர் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர். மின்சார ரெயில் தடம்புரண்ட சம்பவத்தால் நேற்று காலை மும்பையில் பரபரப்பு ஏற்பட்டது.