ஆரேகாலனியில் பணிமனை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டம்

ஆரேகாலனியில் பணி மனை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த உள்ளனர். இதில் ஆம் ஆத்மி கட்சியினர் பங்கேற்க உள்ளனர்.;

Update:2022-07-02 23:44 IST

மும்பை, 

ஆரேகாலனியில் பணி மனை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த உள்ளனர். இதில் ஆம் ஆத்மி கட்சியினர் பங்கேற்க உள்ளனர்.

ரெயில் பணிமனை

மராட்டியத்தில் கடந்த கால பா.ஜனதா ஆட்சியின் போது மெட்ரோ ரெயில் பணிமனை ஆரேகாலனியில் அமைக்கப்பட இருந்தது. இதன்பின்னர் மகாவிகாஸ் அகாடி கூட்டணி அரசின் போது ஆரேகாலனியில் அமைய இருந்த மெட்ரோ ரெயில் பணிமனை காஞ்சூர்மார்க் பகுதிக்கு மாற்றப்பட்டது. மேலும் ஆரேகாலனியை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அரசு அறிவித்தது.

தற்போது ஆட்சி மாறிய நிலையில், இதுபற்றி துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவிக்கையில், "ஆரேகாலனியில் ஏற்கனவே 25 சதவீத பணிகள் தொடங்கப்பட்டு இருந்ததாகவும், தற்போது 100 சதவீத பணிகள் முழுவீச்சில் நடைபெறும்" என்றார். எனவே ஆரேகாலனியில் மெட்ரோ ரெயில் பணிமனை அமைக்க புதிய அரசு முடிவு செய்து இருப்பது தெரியவந்தது.

இந்த முடிவுக்கு முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இது குறித்து அவர், "ஆரேகாலனி விவகாரத்தில் மும்பையின் இருதயத்தில் குத்தி விட வேண்டாம். ஆரேகாலனி யாருக்கும் தனிப்பட்ட சொத்து அல்ல. காஞ்சூர்மார்க்கில் இருந்து ஆரேகாலனிக்கு மாற்றும் புதிய அரசின் முடிவு வருத்தமளிக்கிறது" என தெரிவித்து இருந்தார்.

இன்று போராட்டம்

இந்த நிலையில் ஆரேகாலனியை காப்பாற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நாளை (ஞாயிற்றுகிழமை) அமைதியான முறையில் போராட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளனர். போராட்டத்தின் போது அசாம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களின் போராட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சி மும்பை பிரிவு தனது ஆதரவை வழங்கி உள்ளது. இதில் மும்பைவாசிகளும் போராட்டத்தில் பங்கேற்குமாறு வேண்டுகோள் விடுத்து உள்ளது. மேலும் நகர வளர்ச்சிக்காக மெட்ரோ ரெயில் போக்குவரத்து அவசியம் எனவும், அதே முக்கியத்துவம் காடுகளுக்கு வழங்கப்பட வேண்டும். இதற்கான தீர்வாக பணிமனையை காஞ்சூர்மார்க்கில் அமைக்க வேண்டும் என டுவிட்டரில் ஆம்ஆத்மி கட்சியினர் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்