துப்பாக்கி முனையில் வாடிக்கையாளர்களிடம் பணம் பறிப்பு - போலி மசாஜ் பார்லர் நடத்திய 7 பேர் கொண்ட கும்பல் கைது
போலி மசாஜ் பார்லர் நடத்தி துப்பாக்கி முனையில் மிரட்டி வாடிக்கையாளர்களிடம் பணம் பறித்த கும்பலை போலீசார் கைது செய்து உள்ளனர்.;
மும்பை,
போலி மசாஜ் பார்லர் நடத்தி துப்பாக்கி முனையில் மிரட்டி வாடிக்கையாளர்களிடம் பணம் பறித்த கும்பலை போலீசார் கைது செய்து உள்ளனர்.
வைர வியாபாரியிடம் பணம் பறிப்பு
மும்பையில் மசாஜ் பார்லர் நடத்தி வந்தவர் நிலேஜ் சரோஜ் (வயது24). இவரிடம் மசாஜ் பார்லர் வரும் வாடிக்கையாளர்களின் செல்போன் எண்கள் இருந்தது. அதை வைத்து அவர் மசாஜ் பார்லர் வாடிக்கையாளர்களிடம் கொள்ளையடிக்க திட்டம் போட்டார். சம்பவத்தன்று அவர் மும்பையை சேர்ந்த 45 வயது வைர வியாபாரியை தொடர்பு கொண்டார். அவரிடம் வக்கோலா பகுதியில் உள்ள ஓட்டலில் புதிய மசாஜ் பார்லரை திறந்து இருப்பதாக கூறினார். இதையடுத்து அவர் வக்கோலாவில் உள்ள ஓட்டலுக்கு வந்தார். அவர் மசாஜ் பார்லருக்கு சென்றவுடன் நிலேஜ் சரோஜ் மற்றும் அவனது கூட்டாளிகள் துப்பாக்கியை காட்டி மிரட்டி வைர வியாபாரியிடம் ரூ.95 ஆயிரம் பறித்தனர்.
7 பேர் கைது
இதுதொடர்பாக வைர வியாபாரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி மசாஜ் பார்லர் நடத்தி வாடிக்கையாளரிடம் பணம் பறித்த நிலேஜ் சரோஜ் உள்பட 7 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து நாட்டு துப்பாக்கி, தோட்டா மற்றும் 9 செல்போன் மற்றும் ரூ.10 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் கும்பல் குறைந்த 5 பேரிடம் இதே பாணியில் பணம் பறித்தது தெரியவந்து உள்ளது.