40 சதவீத ஏற்றுமதி வரியை கண்டித்து அகமதுநகரில் வெங்காய ஏலத்தை நிறுத்திய விவசாயிகள்

40 சதவீத ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டதை கண்டித்து அகமதுநகரில் விவசாயிகள் வெங்காய ஏலத்தை நிறுத்தி எதிர்ப்பை பதிவு செய்தனர்.;

Update:2023-08-21 01:15 IST

மும்பை, 

40 சதவீத ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டதை கண்டித்து அகமதுநகரில் விவசாயிகள் வெங்காய ஏலத்தை நிறுத்தி எதிர்ப்பை பதிவு செய்தனர்.

விலை உயர்வு

தக்காளியை தொடர்ந்து வெங்காயத்தின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த விலை உயர்வை கருத்தில் கொண்டு ஏற்றுமதியை கட்டுப்படுத்துவதற்காக டிசம்பர் 31-ந்தேதி வரை வெங்காயத்தின் ஏற்றுமதிக்கு 40 சதவீத ஏற்றுமதி வரியை மத்திய அரசு விதித்துள்ளது. இந்தநிலையில் மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ராகுரி மொத்த சந்தையில் விசாயிகள் வெங்காய ஏலத்தை நிறுத்தி தங்களது எதிர்ப்பை பதிவு செய்து உள்ளனர். இது குறித்து ஸ்வாபிமானி ஷெத்காரி சங்கதனாவின் மாநில தலைவர் சந்தீப் ஜக்தாப் கூறியதாவது:-

போராட்டம் நடத்தப்படும்

மத்திய அரசின் விவசாயிகள் விரோத நிலை மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. விவசாயிகள் வெங்காய ஏற்றுமதியில் நல்ல வருவாயை எதிர்பார்த்தனர். ஆனால் தற்போது விதிக்கப்பட்ட வரியால் ஏற்றுமதி இருக்காது என்பது உறுதியாகி உள்ளது. உள்நாட்டு சந்தையில் விலை சரிந்து விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். மராட்டியத்தில் பல பகுதிகளில் போதிய மழை பெய்யாததால், புதிய வெங்காயம் சந்தைக்கு வருவதில் தாமதம் ஏற்படும். நுகர்வோர்களின் நலன்களை அரசு பாதுகாக்க முயற்சிக்கிறது. ஆனால் விவசாயிகளை புறக்கணிக்கிறது. மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க மாநிலம் முழுவதும் மொத்த விற்பனை சந்தைகளில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

குறைந்த விலை

இதேபோல ராகுரி சந்தையில் ஏலம் விடுவதை நிறுத்திவிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி ஒருவர் கூறுகையில், "எங்கள் துயரங்கள் குறித்தும் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும். ஏனெனியில் ஏற்றுமதி வரியால் வெங்காயம் அனைத்தும் உள்நாட்டு சந்தைகளில் மட்டுமே விற்கப்பட உள்ளது. இதை சாதகமாக பயன்படுத்தி வணிகர்கள் இப்போது எங்களின் விளை பொருட்களை குறைந்த விலையில் கேட்கின்றனர்" என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்