மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைதான 4 பேர் சிறையில் அடைப்பு
மும்பை தொடர்குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சிறப்பு கோர்ட்டு அனுமதி அளித்து உள்ளது.;
மும்பை,
மும்பை தொடர்குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சிறப்பு கோர்ட்டு அனுமதி அளித்து உள்ளது.
குண்டுவெடிப்பு வழக்கு
மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவத்தில் 257 பேர் பலியானார்கள். மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஏற்கனவே பலரை போலீசார் கைது செய்து இருந்தனர்.
இதற்கிடையில் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தலைமறைவான 4 பேர் குஜராத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
இதன்பேரில் கடந்த 12-ந் தேதி குஜராத் பயங்கரவாத தடுப்பு படையினர் விசாரணை நடத்தி பதுங்கி இருந்த அபுபக்கர், சையத் குரோஷி, முகமது ஷிப் குரோஷி மற்றும் முகமது யூசுப் இஸ்மாயில் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் இவர்களை விசாரணைக்காக சி.பி.ஐ. போலீசாரிடம் ஒப்படைத்தனர். கடந்த 29 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அவர்களை அண்மையில் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சி.பி.ஐ. காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர்.
நீதிமன்ற காவல்
இந்த நிலையில் விசாரணை நிறைவு பெற்ற நிலையில் இன்று மீண்டும் சிறப்பு நீதிபதி ஆர்.ஆர். போசலே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். கோர்ட்டில் அவர்களின் காவலை மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்க சி.பி.ஐ. போலீசார் அனுமதி கேட்டனர்.
ஆனால் அந்த மனுவை நிராகரித்த நீதிபதி கைது செய்யப்பட்ட 4 பேரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.