தானேயில் முழு அடைப்பு போராட்டம்

உத்தவ் சிவசேனா பிரமுகரான சுஷ்மா அந்தாரேவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தானேயில் வர்காரி சமூகத்தினர் நடத்திய முழு அடைப்பால் சாலை வெறிச்சோடியது.;

Update:2022-12-18 00:15 IST

தானே, 

உத்தவ் சிவசேனா பிரமுகரான சுஷ்மா அந்தாரேவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தானேயில் வர்காரி சமூகத்தினர் நடத்திய முழு அடைப்பால் சாலை வெறிச்சோடியது.

தானேயில் பந்த்

உத்தவ் பாலாசாகேப் சிவசேனா கட்சியின் துணை தலைவர் சுஷ்மா அந்தாரே. இவர் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் வர்காரி சமூகத்தை தரக்குறைவாக பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இதனால் மாநிலம் முழுவதும் உள்ள வர்காரி சமூகத்தினர் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மேலும் அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அவர் இருக்கும் கட்சிக்கு வாக்களிக்க மாட்டோம் உறுதி மொழி எடுத்தனர்.

முழு அடைப்பு

இந்த நிலையில் தானே நகரில் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வர்காரி சமூகத்தினர் பல இந்து அமைப்புகளுடன் சேர்ந்து முழு அடைப்பு நடத்த அழைப்பு விடுத்து இருந்தனர்.

அதன்படி நேற்று தானேயில் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடவில்லை. பஸ் சேவையும் பாதிக்கப்பட்டது. பல சாலைகள் வெறிச்சோடின. நகரில் எந்த அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். வாகனங்கள் எதுவும் ஓடாததால் காலையில் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

இந்த முழு அடைப்புக்கு ஆளும் ஷிண்டே பாலாசாகேப் சிவசேனா கட்சியினர் ஆதரவு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்