சிறுமிகளிடம் தங்கச்சங்கிலி பறித்த குஜராத் வாலிபர் கைது- பல மாநிலங்களில் கைவரிசை காட்டியது அம்பலம்

இன்ஸ்டாகிராம் மூலம் நட்பாக பழகி சிறுமியிடம் தங்கச்சங்கிலி பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். இவர் பல மாநிலங்களில் கைவரிசை காட்டியது தெரியவந்தது.;

Update:2023-02-17 00:15 IST

மும்பை,

இன்ஸ்டாகிராம் மூலம் நட்பாக பழகி சிறுமியிடம் தங்கச்சங்கிலி பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். இவர் பல மாநிலங்களில் கைவரிசை காட்டியது தெரியவந்தது.

தங்கச்சங்கிலி பறிப்பு

மும்பையை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் குஜராத் மாநிலம் நாடியாட் பகுதியை சேர்ந்த யாஷ் புல்சந்தானி (வயது21) என்ற வாலிபரின் அறிமுகம் கிடைத்தது. நட்பாக பழகிய வாலிபர் கடந்த மாதம் மும்பை வந்து சந்திப்பதாக சிறுமியிடம் தெரிவித்தார். இதன்படி மும்பை வந்த யாஷ் புல்சந்தானி அந்தேரியில் உள்ள சாக்கிநாக்கா பகுதியில் சிறுமியை சந்தித்தார்.

பின்னர் வில்லேபார்லேவிற்கு ஆட்டோவில் 2 பேரும் சென்றனர். அப்போது, சிறுமியிடம் நீ அணிந்திருக்கும் தங்கச்சங்கிலியை தனக்கு தருமாறும், உனக்கு புதிய விலையுயர்ந்த செல்போன் வாங்கி தருவதாகவும் யாஷ் புல்சந்தானி தெரிவித்தார். இதன்படி தங்கச்சங்கிலியை வாங்கிய சில நிமிடத்தில் ஆட்டோவில் இருந்து நைசாக அவர் நழுவி சென்றார்.

வாலிபர் கைது

இதனால் ஏமாற்றம் அடைந்த சிறுமி சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்தாள். பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து யாஷ் புல்சந்தானியை பிடிக்க விசாரணை நடத்தி வந்தனர். இவர் இதே பாணியில் டெல்லி, ராஜஸ்தான், கோவா, குஜராத் மாநிலத்தில் சிறுமிகளிடம் நட்பாக பழகி ஏமாற்றி வந்ததுடன், லாட்ஜ்கள், ஓட்டல்கள் மற்றும் விடுதிகளில் கைவரிசை காட்டி வந்ததும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து போலீசார் அவரது நடமாட்டத்தை கண்காணித்து யாஷ் புல்சந்தானியை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள செல்போன், மடிக்கணினி போன்றவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்