சத்ரபதி சிவாஜி அவமதிக்கப்படுவதை சகித்து கொள்ளும் ஷிண்டே அரசால் பெல்காவ் மராத்தியர்களுக்கு எப்படி நீதியை பெற்று தர முடியும்?- சஞ்சய் ராவத் கேள்வி
சத்ரபதி சிவாஜி அவமதிக்கப்படுவதை சகித்து கொள்ளும் ஏக்நாத் ஷிண்டே அரசால் பெல்காவை சேர்ந்த மராத்தி மக்களுக்கு எப்படி நீதியை வாங்கி தர முடியும் என சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பி உள்ளார்.;
மும்பை,
சத்ரபதி சிவாஜி அவமதிக்கப்படுவதை சகித்து கொள்ளும் ஏக்நாத் ஷிண்டே அரசால் பெல்காவை சேர்ந்த மராத்தி மக்களுக்கு எப்படி நீதியை வாங்கி தர முடியும் என சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பி உள்ளார்.
எல்லை பிரச்சினை
மராட்டிய அரசு நேற்று முன்தினம் மாநில எல்லை பகுதிகளில் வசிக்கும் மராட்டிய மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தியது. கூட்டத்துக்கு பிறகு மராட்டிய - கர்நாடக எல்லை பிரச்சினை சட்ட நடவடிக்கையை முன்எடுத்து செல்ல மந்திரிகள் சந்திரகாந்த் பாட்டீல், சம்புராஜ்தேசாய் ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
இதேபோல கா்நாடக எல்லையில் உள்ள பெல்காவ் பகுதியில் வசிக்கும் மராட்டியர்கள் பிரச்சினைகள் குறித்து முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார்.
சஞ்சய் ராவத் கேள்வி
இதுதொடர்பாக சஞ்சய் ராவத் எம்.பி. கூறியதாவது:-
முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவும், மந்திரி சந்திரகாந்த் பாட்டீலும் பதவி ஏற்ற பிறகு எத்தனை முறை பெல்காவ் சென்று உள்ளனர்?. பதவி ஏற்ற பிறகு ஏக்நாத் ஷிண்டே, சந்திரகாந்த் பாட்டீல் 2 பேரும் ஒருமுறை கூட பெல்காவ் செல்லவில்லை. எல்லை பகுதியை சேர்ந்த மராத்திய இளைஞர்கள் மீது பதிவு செய்யப்பட்ட பொய் வழக்குகளை திரும்ப பெற கர்நாடக முதல்-மந்திரியை வலியுறுத்த வேண்டும். சத்ரபதி சிவாஜி மன்னர் அவமதிக்கப்படுவதை சகித்து கொள்ளும் இந்த முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி மற்றும் அரசால் எப்படி எல்லை பகுதி மக்களுக்கு நீதியை வாங்கி கொடுக்க முடியும்?. எல்லை பிரச்சினையில் கா்நாடக அரசு அதிக விழிப்புடன் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.