நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராகும் மகா விகாஸ் அகாடியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்?
நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராகும் மகா விகாஸ் அகாடியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என விவரம் வெளியாகி உள்ளது.;
மும்பை,
நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராகும் மகா விகாஸ் அகாடியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என விவரம் வெளியாகி உள்ளது.
பேச்சுவார்த்தை
மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சிகள் அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகிறது. இந்தநிலையில் சமீபத்தில் சரத்பவாரின் 'சில்வர் ஓக்' வீட்டில் கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்பின்போது எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்று பேசப்பட்டது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றுபட்ட சிவசேனா 18 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது. அதில் சுமார் 13 எம்.பி.க்கள் முதல்-மந்திரி ஷிண்டே வசம் சென்று விட்டாலும், அந்த தொகுதிகளின் தொண்டர்கள் தங்கள் வசமே இருப்பதாக உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கூறியது. எனவே தங்களுக்கு 18 தொகுதிகள் வேண்டும் என்று அந்த கட்சி வலியுறுத்தி உள்ளது. இதேபோல காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளை கேட்டு உள்ளது.
'பார்முலா'
இருப்பினும் உத்தவ் தாக்கரே கட்சிக்கு 15 இடங்களும், தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா 13 இடங்களும் இதர தொகுதிகள் மற்ற சிறிய கட்சிகளுக்கு ஒதுக்குவது என ஒரு பார்முலா வகுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் இது தொடர்பாக முறையான பேச்சுவார்த்தை தொடங்கவில்லை என்று கூட்டணி கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.
கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரே இடத்தில் தான் வெற்றி பெற்றது. ஆனால் 16 தொகுதிகளை கேட்பது எப்படி நியாயம் என்று கூட்டணியின் மற்றொரு கட்சி தலைவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
மராட்டியத்தில் 48 நாடாளுமன்ற தொகுதிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.