அவுரங்கசீப் கல்லறையை இடிக்க பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுவேன்- சிவசேனா எம்.எல்.ஏ. பேட்டி
அவுரங்கசீப்பின் கல்லறையை இடிக்க பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுவேன் என சிவசேனா எம்.எல்.ஏ. சஞ்சய் ஷிர்சாட் கூறியுள்ளார்.;
மும்பை,
அவுரங்கசீப்பின் கல்லறையை இடிக்க பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுவேன் என சிவசேனா எம்.எல்.ஏ. சஞ்சய் ஷிர்சாட் கூறியுள்ளார்.
எம்.ஐ.எம். போராட்டம்
அவுரங்காபாத் நகரின் பெயர் சத்ரபதி சம்பாஜி நகர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பெயர் மாற்றத்துக்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்து உள்ளது.
அவுரங்காபாத்தின் பெயர் மாற்றப்பட்டதை கண்டித்து எம்.ஐ.எம். கட்சியினர் அந்த பகுதி எம்.பி. இம்தியாஸ் ஜலீல் தலைமையில் கடந்த 4-ந் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மோடிக்கு கடிதம்
இதுதொடர்பாக சிவசேனா எம்.எல்.ஏ. சஞ்சய் ஷிர்சாட் நிருபர்களிடம் கூறியதாவது:-
அதுபோராட்டம் அல்ல. பிரியாணி கட்சியின் படங்கள் மட்டும் பரவி வருகின்றன. ஊர் பெயரை மாற்றியதில் அவுரங்காபாத் முஸ்லிம்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் ஐதராபாத்தில் உள்ளவர்களுக்கு பிரச்சினை உள்ளது. ஊரின் பெயரை மாற்றியதில் உங்களுக்கு என்ன பிரச்சினை?. நீங்கள் அவுரங்கசீப்பின் வம்சாவளியா?.
எம்.ஐ.எம். கட்சி தலைவர் ஒவைசி அவுரங்சீப்பின் கல்லறைக்கு சென்று வணங்குகிறார். அவுரங்கசீப்பின் நினைவு நாள் ஒருநாளும் அனுசரிக்கப்பட கூடாது. அவுரங்காபாத்தில் உள்ள அவரின் கல்லறை இடித்து அகற்றப்பட வேண்டும். இதை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுவேன். இம்தியாஸ் ஜலீல் நகரில் அமைதியை சீர்குலைக்க முயற்சி செய்வதால் இதுதொடர்பாக போலீஸ் கமிஷனரையும் சந்திப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.