ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி கடன் மோசடி வழக்கில் வீடியோகான் அதிபர் வேணுகோபால் தூத்துக்கு ஜாமீன்

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி கடன் மோசடி வழக்கில் வீடியோகான் அதிபர் வேணுகோபால் தூத்துக்கு இடைக்கால ஜாமீன் வழங்கிய மும்பை ஐகோர்ட்டு, சி.பி.ஐ.க்கு கண்டனம் தெரிவித்தது.;

Update:2023-01-21 00:15 IST

மும்பை, 

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி கடன் மோசடி வழக்கில் வீடியோகான் அதிபர் வேணுகோபால் தூத்துக்கு இடைக்கால ஜாமீன் வழங்கிய மும்பை ஐகோர்ட்டு, சி.பி.ஐ.க்கு கண்டனம் தெரிவித்தது.

கடன் மோசடி வழக்கு

பிரபல தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ-யின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் சந்தா கோச்சார். உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலிலும் இடம்பெற்று இருந்த இவர், பதவியில் இருந்தபோது வீடியோகான் நிறுவனத்துக்கு ரூ.3 ஆயிரத்து 250 கோடி கடனை முறைகேடாக வழங்கி மோசடியில் ஈடுபட்டதாக சி.பி.ஐ. 2019-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.

இந்தநிலையில் கடந்த டிசம்பர் மாதம் 23-ந் தேதி சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சாரை சி.பி.ஐ. அதிரடியாக கைது செய்தது. அதன் பிறகு வீடியோகான் அதிபர் வேணுகோபால் தூத்தும் கைது செய்யப்பட்டார்.

ஜாமீனில் விடுவிப்பு

இந்த வழக்கில் கைதான சந்தா கோச்சார் மற்றும் தீபக் கோச்சாருக்கு கடந்த 9-ந் தேதி ஜாமீன் வழங்கி மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அப்போது இவர்கள் எந்திரத்தனமான முறையில் கைது செய்யப்பட்டதாக சி.பி.ஐ.-யை ஐகோர்ட்டு சாடியது.

இந்தநிலையில் வேணுகோபால் தூத் தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரியும், சி.பி.ஐ. பதிவு செய்த எப்.ஐ.ஆரை ரத்து செய்யக்கோரியும் மும்பை ஐகோர்ட்டில் மனு செய்தார். அந்த மனு விசாரணை முடிந்து நேற்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

அப்போது வேணுகோபால் தூத்துக்கு ரூ.1 லட்சம் பிணைத் தொகையுடன் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.

கண்டனம்

இதற்கிடையே கைது நடவடிக்கையில் குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 41-யை கடைப்பிடிக்காத சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். இந்த சட்டப்பிரிவின்படி போலீசார் குற்றம் சாட்டப்பட்டவருக்கு முதலில் நோட்டீஸ் அனுப்பி விசாரிக்க வேண்டும். தேவைப்பட்டால் மட்டும் கைது செய்ய வேண்டும். ஆனால் இந்த சட்டவிதியை பின்பற்றாமல் வேணுகோபால் தூத் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று கூறி அவரை கைது செய்ததற்கு நீதிபதிகள் கண்டனத்தை பதிவு செய்தனர்.

மேலும் எப்.ஐ.ஆரை ரத்து செய்யக்கோரிய மனு மீது அடுத்த மாதம் (பிப்ரவரி) 6-ந் தேதி விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்