எம்.எல்.ஏ.க்கள் வெளியேறியது பற்றி உத்தவ் தாக்கரே சுய பரிசோதனை செய்தால் 2 அணிகளும் இணையும்- ஷிண்டே அணி கருத்து

எம்.எல்.ஏ.க்கள் வெளியேறியது பற்றி உத்தவ் தாக்கரே சுயபரிசோதனை செய்தால் சிவசேனாவின் 2 அணிகளும் இணையும் என ஷிண்டே அணியை சேர்ந்த மந்திரி தீபக் கேசர்கர் கூறியுள்ளார்.;

Update:2023-01-03 00:15 IST

மும்பை,

எம்.எல்.ஏ.க்கள் வெளியேறியது பற்றி உத்தவ் தாக்கரே சுயபரிசோதனை செய்தால் சிவசேனாவின் 2 அணிகளும் இணையும் என ஷிண்டே அணியை சேர்ந்த மந்திரி தீபக் கேசர்கர் கூறியுள்ளார்.

உத்தவ் தாக்கரே ஆதங்கம்

உத்தவ் பால்தாக்கரே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும், ஏக்நாத் ஷிண்டே அணியை சேர்ந்த மந்திரியுமான தீபக் கேசர்கரும் எதிர்பாராதவிதமாக நாக்பூரில் நடந்த குளிர்கால கூட்டத்தொடரின் போது எதிர் எதிரே சந்தித்து கொண்டனர். உத்தவ் தாக்கரே மேல்-சபை துணை தலைவர் நீலம் கோரே அலுவலகத்தில் இருந்து வெளியே சென்றபோது, தீபக் கேசர்கர் உள்ளே வந்தார்.

அப்போது உத்தவ் தாக்கரே தனது ஆதங்கத்தை கட்டுப்படுத்த முடியாமல், தீபக் கேசர்கரிடம் கொட்டி தீர்த்தார். உத்தவ் தாக்கரே, தீபக் கேசர்கரை பார்த்து, "நாங்கள் உங்களுக்கு என்ன கேடு செய்தோம்?. உங்களுக்கு என்ன செய்யாமல் இருந்தோம்?. ஆனால் நீங்கள், எங்களுக்கு எதிராக விசாரணையை (திஷா சாலியன் மரண வழக்கு) தொடங்குகிறீர்கள்" என்றார்.

மேலும் மும்பை மாநகராட்சி அலுவலகத்தை ஷிண்டே அணி அபகரிக்க முயற்சி செய்த விவகாரம் குறித்தும் கோபமாக பேசினார். தீபக் கேசர்கர் எதுவும் பேசாமல் அங்கு இருந்து சென்றுவிட்டார்.

2 அணிகள் இணையும்

இந்தநிலையில் தீபக் கேசர்கர், உத்தவ் தாக்கரே ஏன் எம்.எல்.ஏ.க்கள் விலகி சென்றார்கள் என சுயபரிசோதனை செய்தால் மீண்டும் சிவசேனா அணிகள் இணையும் என கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், "பால்தாக்கரேவின் சித்தாந்தத்திற்காக போராடுபவர்கள் எளிதில் அதைவிட்டு கொடுக்கமாட்டார்கள். கண்டிப்பாக ஏதாவது நடந்து இருக்க வேண்டும். அதனால் தான் எம்.எல்.ஏ.க்கள் வெளியேறி உள்ளனர். என்ன நடந்தது என உத்தவ் தாக்கரே சுயபரிசோதனை செய்ய வேண்டும். உத்தவ் தாக்கரே சுயபரிசோதனை செய்தால், சிவசேனா ஒன்றுபட அதிக காலம் ஆகாது" என்றார்.

சஞ்சய் ராவத் மறுப்பு

தீபக் கேசர்கரின் கருத்து குறித்து உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறுகையில், "சிவசேனாவின் 2 அணிகள் இணைய வாய்ப்பில்லை. விரைவில் 16 எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டால் தகுதி நீக்கம் செய்யப்பட உள்ளனர். வழக்கு விசாரணை தொடங்கினால் விரைவில் தீர்ப்பு வந்துவிடும். அவர்களுடன் நாங்கள் கைகோர்க்க மாட்டோம். அவர்கள் பா.ஜனதாவுடன் தான் சேர வேண்டும். அது தான் அவர்களின் திட்டம். அவர்கள் தான் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். விரைவில் அவர்களது அணி இல்லாமல் போய்விடும்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்