எந்த வழக்கில் கைது செய்யப்படுவார் என பட்னாவிஸ் பயந்தார்?- உத்தவ் சிவசேனா கேள்வி

எந்த வழக்கில் கைது செய்யப்படுவார் என தேவேந்திர பட்னாவிஸ் பயந்தார்? என உத்தவ் சிவசேனா கேள்வி எழுப்பி உள்ளது.;

Update:2023-02-16 18:19 IST

மும்பை, 

எந்த வழக்கில் கைது செய்யப்படுவார் என தேவேந்திர பட்னாவிஸ் பயந்தார்? என உத்தவ் சிவசேனா கேள்வி எழுப்பி உள்ளது.

பட்னாவிசுக்கு பதிலடி

உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி அரசு என்னை கைது செய்து சிறையில் தள்ள முயன்றது, இதற்காக அப்போதைய மும்பை போலீஸ் கமிஷனர் சஞ்சய் பாண்டேக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டு இருந்தது, ஆனால் நான் எந்த தவறும் செய்யாததால் அவர்களின் முயற்சி பலிக்கவில்லை என்று சமீபத்தில் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பரபரப்பு தகவலை வெளியிட்டார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனாவின் கட்சி பத்திரிகையான 'சாம்னா'வில் கூறியிருப்பதாவது:-

எந்த வழக்கில் தொடர்பு?

தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாக இருந்த போது எதிர்க்கட்சி தலைவர்கள் போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டன. போன் ஒட்டுகேட்பு என்பது குற்றமா?, இல்லையா?. இதற்கு அவர் விளக்கம் அளிக்க வேண்டும்.

போன் ஒட்டு கேட்பு வழக்கில் பட்னாவிசின் வீட்டுக்கே சென்று அவரிடம் மரியாதையாக போலீசார் வாக்குமூலம் பதிவு செய்தனர். ஆனால் அவர் இதை ஏன் பெரிதுப்படுத்த வேண்டும். அவர் எந்த வழக்கில் கைது செய்யப்படுவார் என பயந்தார்?. அவருக்கு எந்த வழக்கில் தொடர்பு இருந்தது?. இது பற்றியும் அவர் விளக்கம் அளிக்க வேண்டும்.

பதவி உயர்வு

போன் ஒட்டுகேட்டு வழக்கில் ஐ.பி.எஸ். அதிகாரி ராஷ்மி சுக்லா மீது மும்பை, புனேயில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் அவருக்கு தற்போது மத்திய அரசு பதவி உயர்வு வழங்கி உள்ளது.

மகா விகாஸ் அகாடி தலைவர்களான அனில் தேஷ்முக், சஞ்சய் ராவத், நவாப் மாலிக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அரசியல் எதிராளிகள் கைது செய்யப்படுவது, அவர்களது குடும்பத்தினர் துன்புறுத்தப்படுவது போன்றவை மராட்டிய அரசியல் கலாசாரத்தில் இல்லாதவை. ஆனால் அதை பா.ஜனதா செய்து வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்