பட்னாவிஸ், கிரிஷ் மகாஜனை கைது செய்ய திட்டமிட்டதற்கு நானே சாட்சி- முதல்-மந்திரி ஷிண்டே தகவல்
மகா விகாஸ் அகாடி அரசு தேவேந்திர பட்னாவிஸ், கிரிஷ் மகாஜனை கைது செய்ய திட்டமிட்டதற்கு நானே சாட்சி என முதல்-மந்தரி ஏக்நாத் ஷிண்டே குற்றம் சாட்டி உள்ளார்.;
மும்பை,
மகா விகாஸ் அகாடி அரசு தேவேந்திர பட்னாவிஸ், கிரிஷ் மகாஜனை கைது செய்ய திட்டமிட்டதற்கு நானே சாட்சி என முதல்-மந்தரி ஏக்நாத் ஷிண்டே குற்றம் சாட்டி உள்ளார்.
கைது செய்ய திட்டம்
துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், கடந்த மகா விகாஸ் அகாடி ஆட்சி காலத்தில் தன்னை கைது செய்ய சதித்திட்டம் நடந்ததாக சமீபத்தில் குற்றம் சாட்டினார். ஆனால் இந்த குற்றச்சாட்டை முன்னாள் உள்துறை மந்திரியான திலீப் வால்சே பாட்டீல் திட்டவட்டமாக மறுத்தார்.
இந்தநிலையில் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு செய்தியாளர்களிடம் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே இதுகுறித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நானே சாட்சி
மகா விகாஸ் அகாடி அரசு அப்போதைய எதிர்க்கட்சி தலைவர்களான தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் கிரிஷ் மகாஜனை கைது செய்ய திட்டமிட்டதற்கு நானே சாட்சியாவேன்.
அதுமட்டும் இன்றி கிரிஷ் மகாஜனுக்கு எதிராக மராட்டிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் கட்டுப்பாடு சட்டம் (மோக்கா) 1999-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யவும் திட்டமிடப்பட்டது.
கைது செய்வதன் மூலமாக பாரதீய ஜனதா கட்சியை பின்னுக்கு தள்ளுவது அவர்கள் வியூகமாக இருந்தது. இதை தடுக்க அந்த நேரத்தில் நான் என்ன சென்னேன் என்பதை மீண்டும் சொல்ல விரும்பவில்லை.
அரசை கவிழ்த்தேன்
அவர்களின் முடிவை மாற்றுவதற்கு பதிலாக பின்னர் நான் முழு அரசாங்கத்தையும் கவிழ்த்து அவர்களை(மகா விகாஸ் அகாடி அரசு) வீட்டில் உட்கார வைத்தேன்.
அந்த சதியில் ஈடுபட்டவர்கள் மீது அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்கிறீர்கள். அவர்களின் பதவி பறிக்கப்பட்டதே போதுமானது. இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் யார் என்பது எனக்கு நன்றாக தெரியும். தேவைப்படும் பட்சத்தில் இதுகுறித்து விசாரணை நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.