சர்ச்சை தலைவரின் காலில் விழுந்த இன்போசிஸ் நிறுவனர் மனைவி- கடும் விமர்சனத்துக்கு ஆளானார்
சர்ச்சைக்குரிய வலதுசாரி அமைப்பின் தலைவர் சம்பாஜி பிடேவின் காலில் இன்போசிஸ் நிறுவன தலைவரின் மனைவி சுதா மூர்த்தி விழுந்த சம்பவம் கடும் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது.;
மும்பை,
சர்ச்சைக்குரிய வலதுசாரி அமைப்பின் தலைவர் சம்பாஜி பிடேவின் காலில் இன்போசிஸ் நிறுவன தலைவரின் மனைவி சுதா மூர்த்தி விழுந்த சம்பவம் கடும் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது.
சர்ச்சை தலைவர்
இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி. இவர்களது மகளை தான் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மணந்துள்ளார். எழுத்தாளரான சுதா மூர்த்தி மராட்டிய மாநிலம் சாங்கிலியில் தனது வாசகர்களை சந்தித்து பேசும் நிகழ்ச்சி கடந்த திங்கட்கிழமை நடந்தது.
இந்த நிகழ்வின் போது திடீரென அங்கு வலதுசாரி அமைப்பான "சிவபிரதிஷ்தான்" தலைவர் சம்பாஜி பிடே வந்தார். இதில், சுதா மூர்த்தி அவரது காலில் விழுந்து ஆசி பெற்ற வீடியோ சமூகவலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
சம்பாஜி பிடே சமீபத்தில் அவரை பேட்டி எடுக்க சென்ற பெண் பத்திரிகையாளரை, நெற்றியில் எதுவுமின்றி விதவை போல வராமல் பொட்டு வைத்துவிட்டு தன்னிடம் பேச வருமாறு கூறியிருந்தார். இதுதொடர்பாக மாநில பெண்கள் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கடும் விமர்சனம்
இந்தநிலையில் சம்பாஜி பிடேவின் காலில் விழுந்து சுதா மூர்த்தி ஆசி பெற்றதை சிலர் விமர்சித்து உள்ளனர்.
சுதா மூர்த்தி, சம்பாஜி பிடே சந்திப்பு குறித்து மூத்த பத்திரிகையாளர் நிக்கில் வாக்ளே டுவிட்டாில், "இவர் போன்ற தவறான நபரின் காலில் விழுந்து என்ன சாதித்து விட முடியும்?" என கூறியுள்ளார்.
ஆம் ஆத்மி தேசிய செயற்குழு உறுப்பினர் பிரீத்தி சர்மா, "அவர் பொட்டு வைத்து இருப்பார் என நம்புகிறேன். சுதா மூர்த்தி போன்றவர்கள் சம்பாஜி பிடே போன்ற மதவெறியர்களை சந்திப்பது, அவர்களின் உண்மையான நிறத்தை வெளிப்படுத்துகிறது" என கூறியுள்ளார்.
உதவியாளர் விளக்கம்
இந்தநிலையில் சுதா மூர்த்திக்கு, சம்பாஜி பிடே யார் என தெரியாது, வயதை கருத்தில் கொண்டு காலில் விழுந்து ஆசி பெற்றதாக அவரது உதவியாளர் யோஜனா யாதவ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "சம்பாஜி பிடே ஆதரவாளர்கள் அழைப்பு இல்லாமல் நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு வந்தனர். வெளியில் அதிகளவில் சம்பாஜி பிடே ஆதரவாளர்கள் திரண்டதால், சம்பாஜி பிடேவை சந்திக்குமாறு சுதா மூர்த்தியை உள்ளூர் போலீசார் கேட்டுக்கொண்டனர். எனவே சுதா மூர்த்தி, சம்பாஜி பிடேயை சந்தித்தார். அவருக்கு சம்பாஜி பிடே யார் என தெரியாது. அவரது வயதுக்கு மரியாதை கொடுக்கும் வகையில் மட்டுமே சுதா மூர்த்தி சம்பாஜி பிடேயை வணங்கினார். சம்பாஜி பிடே, சுதா மூர்த்தியிடம் 1½ மணி நேரம் பேச வேண்டும் என கூறியதாகவும், ஆனால் சில நிமிடங்கள் மட்டுமே சுதா மூர்த்தி பேசிவிட்டு ஒதுக்கினார்" என்றார்.
சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் ராய்காட் கோட்டையில் தங்க சிம்மாசனம் அமைக்க நிதியுதவிக்காக சுதா மூர்த்தியை சம்பாஜி பிடே சந்தித்ததாக சிவபிரதிஷ்தான் அமைப்பின் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.