தற்காப்புக்காக இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டதில் கைதி படுகாயம்- லாத்தூரில் பரபரப்பு

தற்காப்புக்காக போலீஸ் இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டதில் விசாரணை கைதி படுகாயம் அடைந்தார்;

Update:2022-06-03 21:10 IST

லாத்தூர், 

தற்காப்புக்காக போலீஸ் இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டதில் விசாரணை கைதி படுகாயம் அடைந்தார்.

கொலை வழக்கு

லாத்தூர் மாவட்டம் சக்கூர் மற்றும் அகமதுபூர் பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் நாராயண் என்பவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கு தொடர்பாக அவரை போலீசார் கைது செய்து இருந்தனர். ஆனால் கடந்த மார்ச் மாதம் போலீசாரின் பிடியில் இருந்து தப்பி ஓடி விட்டார். இதனால் அவர் மீது மற்றொரு வழக்கு பதிவு செய்து அவரை பிடிக்க விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் அவர் லாத்தூர் நகர் ஸ்ரீநகர் பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி மோகிதே தலைமையில் போலீசார் அங்கு சென்றனர்.

துப்பாக்கியால் சுட்டார்

அங்கிருந்த நாராயணை பிடிக்க முயன்ற போது அவர் இன்ஸ்பெக்டரை தாக்கி உள்ளார். மேலும் கழுத்தை நெரித்து கொல்ல முயன்றுள்ளார். இதனால் தற்காப்பிற்காக போலீஸ் இன்ஸ்பெக்டர் துப்பாக்கியை எடுத்து கைதியை சுட்டார். இதில் இடுப்பில் தோட்டா துளைத்து கைதி படுகாயமடைந்தார்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த 2 பேரையும் போலீசார் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சைக்கு பிறகு இன்ஸ்பெக்டர் வீடு திரும்பினார். கைதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிடிபட்ட நாராயண் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகவும், முன்னதாக மிராஜ் பகுதியில் போலீசாரிடம் பிடிபட்ட போது தப்பி சென்றதும் தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்