பிரதமர் நிவாரண நிதி குறித்து விசாரணை - உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்

பிரதமர் நிவாரண நிதி குறித்து விசாரணை நடத்த வேண்டும் என உத்தவ் தாக்கரே வலியுறுத்தி உள்ளார்.;

Update:2023-06-25 00:30 IST

மும்பை,

பிரதமர் நிவாரண நிதி குறித்து விசாரணை நடத்த வேண்டும் என உத்தவ் தாக்கரே வலியுறுத்தி உள்ளார்.

அமலாக்கத்துறை சோதனை

மும்பை மாநகராட்சி கொரோனா பரவலின் போது மேற்கொண்ட பணிகளில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து அமலாக்கத்துறை கடந்த சில நாட்களுக்கு முன் ஆதித்ய தாக்கரே, சஞ்சய் ராவத்துக்கு நெருக்கமானவர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சஞ்சீவ் ஜெய்ஸ்வாலின் ஆகியோரின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தியது. இந்தநிலையில் நேற்று முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மும்பையில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியதாவது:-

பயப்படவில்லை

கொரோனாவின் போது உயிர்களை காப்பாற்ற விதிகளை தாண்டி செயல்பட அனுமதி இருந்தது. எனவே நாங்கள் எந்த விசாரணைக்கும் பயப்படவில்லை. நீங்கள் விசாரணை நடத்த விரும்பும் போது, நீங்கள் தானே மாநகராட்சி, பிம்பிரி சிஞ்வட், புனே மற்றும் நாக்பூர் மாநகராட்சியிலும் விசாரணை நடத்த வேண்டும். பிரதமர் நிவாரண நிதி ('பி.எம். கேர்ஸ்') குறித்தும் விசாரணை நடத்த வேண்டும். பிரதமர் நிவாரண நிதி எந்த விசாரணைக்கு கீழும் வரவில்லை. பிரதமர் நிவாரண நிதிக்கு கோடி, கோடியாக நிதி வசூலிக்கப்பட்டுள்ளது. அந்த நிதியில் வாங்கிய வென்டிலேட்டர்கள் வேலை செய்யவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

கொரோனா காலத்தில் தொடங்கப்பட்டது

கொரோனா காலத்தில் பொது மக்களுக்கு உதவி செய்ய 'பி.எம். கேர்ஸ்' (பிரதமர் நிவாரண நிதி) உருவாக்கப்பட்டது. இதன் தலைவர் பிரதமர். பிரதமர் நிவாரண நிதி அமைப்பில் பாதுகாப்பு துறை, உள்துறை, நிதித்துறை மந்திரிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப்பு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வராது என்பது குறிப்பிடத்தக்கது. பி.எம். கேர்ஸ் அமைப்பு உருவான ஒரு வாரத்திலேயே சுமார் ரூ.6 ஆயிரத்து 500 கோடி அளவுக்கு நன்கொடையை ஈர்த்ததாக கூறப்படுகிறது.



Tags:    

மேலும் செய்திகள்