அரசு ஊழியர்கள் போனில் 'வந்தே மாதரம்' என கூறுவது கட்டாயமில்லை- சுதீர் முங்கண்டிவார் விளக்கம்

அரசு ஊழியர்கள் போனில் ‘வந்தே மாதரம்' என கூறுவது கட்டாயமில்லை என மந்திரி சுதீர் முங்கண்டிவார் விளக்கம் அளித்து உள்ளார்.;

Update:2022-08-16 19:40 IST

மும்பை, 

அரசு ஊழியர்கள் போனில் 'வந்தே மாதரம்' என கூறுவது கட்டாயமில்லை என மந்திரி சுதீர் முங்கண்டிவார் விளக்கம் அளித்து உள்ளார்.

போனில் 'வந்தே மாதரம்'

மராட்டிய கலாசார துறை மந்திரி சுதீர் முங்கண்டிவார் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், "நாடு சுதந்திர தின அமுத விழாவை கொண்டாடும் நேரத்தில், அடுத்த ஆண்டு ஜனவரி 26-ந் தேதி வரை அரசு ஊழியர்கள் அனைவரும் போனில் பேசும் போது ஹலோ என கூறாமல் 'வந்தே மாதரம்' என கூற வேண்டும் என்றார்.

மேலும் இதுதொடர்பான அரசு உத்தரவு வரும் 18-ந் தேதி பிறப்பிக்கப்படும் என கூறியிருந்தார். சுதீர் முங்கண்டிவாரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

மந்திரி விளக்கம்

இந்த உத்தரவு குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இந்தநிலையில் அவர் தனது பேச்சு குறித்து விளக்கம் அளித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "அரசு ஊழியர்கள் போனில் பேசும் போது வந்தே மாதரம் என கூறுவது கட்டாயமில்லை. போனை எடுக்கும் போது வந்தே மாதரம் அல்லது தேசப்பற்றை வெளிப்படுத்தும் வகையிலான வார்த்தை அல்லது வார்த்தைகளை அரசு ஊழியர்கள் கூறலாம்.

இதற்கு அமைப்பு அல்லது தனி நபர் எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உள்ளது. வந்தே மாதரம் கூற வேண்டும் என்ற பிரசாரத்தை மாநில கலாசார துறை ஆகஸ்ட் 15-ந் தேதி தொடங்கி உள்ளது. இது வரும் ஜனவரி 26-ந் தேதி வரை நடைபெறும்" என்றார்.

-------------

Tags:    

மேலும் செய்திகள்