மும்பை- கோவா, மும்பை- புனே விரைவு சாலைகளில் நிலச்சரிவால் போக்குவரத்து பாதிப்பு
கனமழையை தொடர்ந்து மும்பை-கோவா நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் மும்பை-புனே விரைவு சாலை நிலச்சரிவை அகற்றும் பணி காரணமாக அந்த சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;
மும்பை,
கனமழையை தொடர்ந்து மும்பை-கோவா நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் மும்பை-புனே விரைவு சாலை நிலச்சரிவை அகற்றும் பணி காரணமாக அந்த சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நிலச்சரிவு
இடைவிடாத கனமழையால் மும்பை-கோவா நெடுஞ்சாலையில் ராய்காட் மாவட்டம் நிவ்லி பவானாடி பகுதியில் நேற்று காலை 6.30 மணி அளவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் ஒருபுறமாக செல்லும் சாலையில் முற்றிலும் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு மண், கற்கள் மூடியது. போக்குவத்து தடை பட்டதால் வெகுதூரம் வரையில் வாகனங்கள் வரிசைக்கட்டி நின்றன. தகவல் அறிந்த மாவட்ட பொறுப்பு மந்திரி உதய் சாமந்த் தலைமையில் அதிகாரிகள் அங்கு சென்றனர்.
பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் அங்கு கிடந்த மண், கற்குவியலை அகற்றும் பணி துரிதமாக நடந்தது. சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சாலையில் குவிந்து கிடந்த மண்ணை அகற்றினர். இதன்பின்னர் மும்பை-கோவா நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது.
மும்பை- புனே விரைவு சாலை
இதற்கிடையே மும்பை-புனே விரைவு சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதோஷி சுரங்கப்பாதை அருகே ஏற்பட்ட நிலச்சரிவு கழிவுகளை அகற்றும் பணி நேற்று நடைபெற்றது. மதியம் 12 மணி முதல் 2.30 மணி வரை தொழிலாளர்கள் போராடி மண், கற்களை அகற்றினர். இந்த நேரத்தில் வாகன போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டு, பணி முடிந்த பிறகு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது.
நிலச்சரிவு கழிவுகள் அகற்றும் பணி காரணமாக மும்பை- புனே நெடுஞ்சாலையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள், பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.