விநாயகர் சதுர்த்தியின் போது புனேயில் நள்ளிரவு வரை ஒலிப்பெருக்கி பயன்படுத்தி கொள்ளலாம்- முதல்-மந்திரி ஷிண்டே அறிவிப்பு

புனேயில் விநாயகர் சதுர்த்தியின்போது 4 நாட்கள் நள்ளிரவு வரை ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்தி கொள்ளலாம் என்று மாநில முதல்- மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவித்து உள்ளார்.;

Update:2022-08-04 16:58 IST

புனே, 

புனேயில் விநாயகர் சதுர்த்தியின்போது 4 நாட்கள் நள்ளிரவு வரை ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்தி கொள்ளலாம் என்று மாநில முதல்- மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவித்து உள்ளார்.

ஆலோசனை

முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே ஒரு நாள் சுற்றுப்பயணமாக நேற்று  புனேவிற்கு சென்றார். இந்த பயணத்தின் போது இரவு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கணபதி மண்டல் குழுவின் சார்பில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டத்தில் புனே போலீஸ் கமிஷனர் அமிதாப் குப்தா, மாநகராட்சி கமிஷனர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் நடப்பு ஆண்டில் கணபதி மண்டல்கள் அனுமதி மற்றும் ஒலிபெருக்கி, மின்இணைப்பு உள்பட பல விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

பந்தல்

பின்னர் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியதாவது:-

தற்போதைய நடைமுறைப்படி புனே மாநகராட்சி ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பந்தல் அமைக்க அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இதில் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க பந்தல் அமைக்க வழங்கப்படும் அனுமதி இனி 5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். ஒவ்வொரு ஆண்டும் அதே வளாகத்தில் மண்டல்கள் மூலம் பந்தல்களை அமைத்து கொள்ளலாம்.

ஒலிபெருக்கி விவகாரம்

இதைத்தவிர சுப்ரீம்கோர்ட்டு வழிகாட்டுதலின் படி பொது இடங்களில் இரவு 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கியை பயன்படுத்த முடியாது. இருப்பினும் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது 15 நாட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக 4 முதல் 5 நாட்கள் நள்ளிரவு வரை ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த தடவை அனைத்து விழாக்களையும் சிறப்பாக கொண்டாட உள்ளோம்.

இந்த ஆண்டு கட்டுப்பாடுகளை தளர்த்த சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளது. கணபதி மண்டல்களுக்கு நிரந்தர மின் மீட்டர் வழங்குவது தொடர்பான பிரச்சினைகள் குறித்து மின்வாரிய அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

-----------------------

Tags:    

மேலும் செய்திகள்