மும்பையில் கார் மோதி காதல் ஜோடி பலி- விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் தந்தை மீது வழக்கு

மும்பையில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் காதல் ஜோடி உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் தந்தை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.;

Update:2023-06-16 00:15 IST

மும்பை, 

மும்பையில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் காதல் ஜோடி உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் தந்தை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பிறந்தநாள் கொண்டாட்டம்

மும்பை நாக்பாடா அரப் தெருவை சேர்ந்தவர் அக்பர் கான் (வயது47). கிராண்ட் ரோடு கிழக்கு பகுதியை சேர்ந்த பெண் கிரண் (35). இருவரும் காதலர்கள் என கூறப்படுகிறது. அக்பர் கான் சம்பவத்தன்று இரவு தனது பிறந்தநாளை கிரணுடன் கொண்டாட மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். இரவு முழுவதும் ஓட்டலில் விருந்து கொண்டாடி விட்டு அதிகாலை 5 மணி அளவில் கிர்காவ் சவுபாத்தி அருகே மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

அப்போது வலது பக்கமாக திரும்பிய போது வேகமாக வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

காதல் ஜோடி பலி

இதில் தூக்கி வீசப்பட்ட காதல் ஜோடி 2 பேரும் பலத்த காயமடைந்தனர். விபத்தில் சம்பவ இடத்திலேயே அக்பர் கான் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். அவரது காதலி கிரண் படுகாயமடைந்தார்.

தகவல் அறிந்த டி.பி. மார்க் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிரணை மீட்டு ஜே.ஜே. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கிரண் உயிரிழந்தார்.

சிறுவனின் தந்தை மீது வழக்கு

இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில், காரை ஓட்டி வந்தவர் பரேல் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய 12-ம் வகுப்பு மாணவர் என்று தெரியவந்தது. அவர் தனது நண்பருடன் காரில் சென்றுள்ளார். வீட்டில் நின்ற காரை பெற்றோரிடம் தெரிவிக்காமல் ஓட்டி சென்றபோது விபத்து நடந்து உள்ளது.

சிறுவனின் தந்தை வங்கியில் மூத்த அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்