சொகுசு பஸ் கவிழ்ந்து தீப்பிடித்த விபத்து: மது போதையில் 25 பயணிகளின் உயிரை பறித்த டிரைவர் - விசாரணையில் அதிர்ச்சி தகவல்

புல்தானா அருகே சொகுசு பஸ் கவிழ்ந்து தீப்பிடித்த விபத்தில் 25 பயணிகள் உடல் கருகி பலியான சம்பவத்தில், டிரைவர் மதுகுடித்துவிட்டு வாகனம் ஓட்டியது அம்பலமாகி உள்ளது.;

Update:2023-07-08 00:30 IST

மும்பை, 

புல்தானா அருகே சொகுசு பஸ் கவிழ்ந்து தீப்பிடித்த விபத்தில் 25 பயணிகள் உடல் கருகி பலியான சம்பவத்தில், டிரைவர் மதுகுடித்துவிட்டு வாகனம் ஓட்டியது அம்பலமாகி உள்ளது.

25 பயணிகள் கருகி சாவு

நாக்பூரில் இருந்து புனே நோக்கி கடந்த மாதம் 31-ந் தேதி மாலை தனியார் சொகுசு பஸ் புறப்பட்டது. அந்த பஸ் மறுநாள் அதிகாலை 1.30 மணியளவில் புல்தானா மாவட்டம் சிந்த்கேட்ராஜா பகுதியில் வந்தபோது தடுப்பு சுவரில் மோதி சாலையில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 25 பயணிகள் உடல் கருகி உயிரிழந்தனர். அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்ததால் அவர்களது உடல்கள் ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்டன. நாட்டை உலுக்கிய இந்த சம்பவத்தில் விபத்துக்கு காரணமான பஸ் டிரைவர் தனிஷ் சேக் என்பவரை போலீசார் கைது செய்து இருந்தனர். போலீசார் அவரின் ரத்த மாதிரியை சேகரித்து ஆய்வுக்காக அமராவதியில் உள்ள தடயவியல் ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைத்தனர்.

மது குடித்து இருந்தது அம்பலம்

ஆய்வில் டிரைவர் தனிஷ் சேக் மதுகுடித்து வாகனம் ஓட்டியது தெரியவந்து உள்ளது. அனுமதிக்கப்பட்டதை விட அவரது ரத்தத்தில் 30 சதவீதம் ஆல்கஹால் அதிகமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மதுகுடித்து விட்டு டிரைவர் தூங்கியதால் விபத்து நடந்தது விசாரணையின் முடிவு மூலம் தெரியவந்து உள்ளது. இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "அதிகாரப்பூர்வமாக கைது செய்யப்பட்ட பிறகு தான் டிரைவரிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது. விபத்து நடந்தவுடன் ரத்த மாதிரி சேகரித்து இருந்தால் ரத்தத்தில் கலந்து இருந்த மது அளவு இன்னும் அதிகமாக இருந்து இருக்கும். தாமதமாக செய்யப்பட்ட பரிசோதனை காரணமாக மது அளவு குறைந்து இருக்கலாம்" என்றார்.

10 ஆண்டு ஜெயில் தண்டனை

போலீசார் டிரைவர் தனிஷ் சேக் மீது மரணத்தை விளைவித்தல் (சட்டப்பிரிவு 304) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். டிரைவர் மது குடித்தது உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு 10 ஆண்டு வரை ஜெயில் தண்டனை கிடைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே விபத்தில் சிக்கிய சொகுசு பஸ் ஏற்கனவே 25 முறை சாலை விதி மீறல்களில் ஈடுபட்டதும், அதில் 6 முறை அபராதம் செலுத்தப்பட்டதும் தெரியவந்துள்ளது. விபத்துக்கு பஸ் உரிமையாளர் எந்த வகையிலாவது காரணமாக உள்ளாரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டீசல் காரணமாக பஸ்சில் தீ வேகமாக பரவியதும், டயர் வெடித்தது விபத்துக்கு காரணமல்ல என்பதும் தடயவியல் சோதனையில் தெரியவந்து உள்ளது. மேலும் விபத்தில் பலியான 23 பேரின் டி.என்.ஏ. பரிசோதனை முடிந்து உள்ளது. 2 பேரின் டி.என்.ஏ. சோதனை முடிந்த பிறகு மாவட்ட நிர்வாகம் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கும் பணிக்கான நடைமுறையை முடிக்க உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்