மராட்டிய-கர்நாடக எல்லை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
மராட்டிய, கர்நாடக எல்லை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இருமாநில கவர்னர்களின் தலைமையில் நடைபெற்றது.;
புனே,
மராட்டிய, கர்நாடக எல்லை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இருமாநில கவர்னர்களின் தலைமையில் நடைபெற்றது.
எல்லை பிரச்சினை
மராட்டிய மற்றும் கர்நாடக எல்லை மாவட்டங்களில் அதிக அளவில் இரு மொழி பேசும் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களிடையே எல்லை சம்பந்தமாகவும், மேலும் பல பிரச்சினைகள் தொடர்பாகவும் அடிக்கடி பிரச்சினை நிலவி வருகிறது. இரு மாநில எல்லை தொடர்பான விவகாரம் தற்போது சுப்ரீம் கோர்டடில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் இரு மாநில எல்லை மாவட்டங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு கூட்டம் மராட்டிய கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி மற்றும் கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் ஆகியோர் தலைமையில் கோலாப்பூரில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் எல்லையோர மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
ஒருமித்த கருத்து
இதுகுறித்து மராட்டிய கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "இந்த கூட்டத்தில் எல்லை மாவட்டங்களில் நிலவும் பல்வேறு பொதுவான பிரச்சினைகள் மற்றும் இரு மாநிலங்களில் இடையே ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான நடைமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது" என்று தெரிவித்துள்ளார்.
கோலாப்பூர் மாவட்ட நிர்வாகிகள் அளித்த தகவலின்படி, "கிருஷ்ணா நதியின் வெள்ள மேலாண்மை, அலமட்டி அணையின் நீர்மட்டம், கோவாவில் இருந்து சட்டவிரோத மதுபான கடத்தலை தடுப்பது, எல்லை மாவட்டங்களுக்கு இடையேயான எளிமையான வர்த்தகம் மற்றும் கால்நடை தோல்நோயை எப்படி எதிர்கொள்வது" உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதேபோல மாநில எல்லையில் உள்ள பகுதிகளில் இரு மொழி பேசும் மக்கள் வசிப்பதால் மராத்தி மற்றும் கன்னட மொழிகளில் வழிகாட்டு பலகைகளை அமைக்க ஒருமித்த கருத்து எட்டப்பட்டதாக கோலாப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.