மலை மாதா ஆலயத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கொல்கத்தாவில் கைது
மலை மாதா ஆலயத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டார்.;
மும்பை,
மலை மாதா ஆலயத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டார்.
வெடிகுண்டு மிரட்டல்
பாந்திராவில் பிரசித்தி பெற்ற மலை மாதா ஆலயம் உள்ளது. ஆலயத்துக்கு கடந்த 28-ந் தேதி மர்ம நபரிடம் இருந்து இ-மெயில் வந்தது. அந்த இ-மெயிலில் ஆலயத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. அடுத்த சில நிமிடங்களில் மேலும் ஒரு இ-மெயில் வந்தது.
அதில், "எனது மனநலம் பாதிக்கப்பட்ட மகன் தெரியாமல் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துவிட்டார், அவரை மன்னித்துவிடுங்கள்" என கூறப்பட்டு இருந்தது. இதுகுறித்து ஆலய நிர்வாகம் சார்பில் பாந்திரா போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
கொல்கத்தாவில் கைது
பாந்திரா சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் ஆலயத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து விடுக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கொல்கத்தா சென்ற மும்பை போலீசார் மலை மாதா ஆலயத்துக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த நபரை கைது செய்தனர். அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) மும்பை அழைத்து வரப்படுவார் என கூறப்படுகிறது.
அவர் மும்பை அழைத்து வரப்பட்ட பிறகு தான் வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதற்கான காரணம் தெரியவரும் என போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.