ரஷியா-உக்ரைன் பிரச்சினையை தீர்க்கும் மோடியால் பெலகாவி பிரச்சினையை தீர்க்க முடியவில்லை- உத்தவ் சிவசேனா தாக்கு

ரஷியா - உக்ரைன் பிரச்சினையை தீர்க்கும் பிரதமர் மோடியால் பெலகாவி பிரச்சினையை தீர்க்க முடியவில்லை என உத்தவ் சிவசேனா கட்சி விமர்சித்து உள்ளது.;

Update:2023-05-03 00:15 IST

மும்பை, 

ரஷியா - உக்ரைன் பிரச்சினையை தீர்க்கும் பிரதமர் மோடியால் பெலகாவி பிரச்சினையை தீர்க்க முடியவில்லை என உத்தவ் சிவசேனா கட்சி விமர்சித்து உள்ளது.

மும்பையை பிரிக்க சதி

உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான 'சாம்னா'வில் பிரதமர் மோடியை விமர்சித்து கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மும்பையை மராட்டியத்தில் இருந்து பிரிக்கவும், மராட்டியத்தை வளம் இல்லாத பகுதியாக மாற்றவும் சதி நடக்கிறது. மும்பையின் சொத்துகளும், வளங்களும் குஜராத்துக்கு திருப்பிவிடப்படுகிறது. மராட்டிய தலைநகருக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டு மும்பையில் உள்ள அலுவலகங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. அவை குஜராத்துக்கு எடுத்து செல்லப்படுகிறது.

டெல்லி பா.ஜனதா தலைவர்கள் மும்பை வந்து மராட்டியத்தை தாக்கிவிட்டு பத்திரமாக செல்கின்றனர். வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் அவர்கள் சத்ரபதி சிவாஜி, அம்பேத்கர், சாவித்ரிபாய் புலேயை அவமதிக்கின்றனர்.

மோடியால் முடியவில்லை

மராட்டியத்தையும், மராட்டிய அடையாளத்தையும் நசுக்கும் வகையில் பா.ஜனதா செயல்படுகிறது. பிரதமர் மோடி ரஷியா - உக்ரைன் போர் பிரச்சினையை தீர்த்து வைக்கிறார். ஆனால் அவரால் பெலகாவி எல்லை பிரச்சினையை தீர்க்க முடியவில்லை. பெலகாவிக்காக 70 ஆண்டுகளாக நாம் போராடி வருகிறோம். எல்லை பிரச்சினை வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றுவிட்டது. 20 லட்சம் மராட்டிய சகோதரர்களின் அழுகைக்கு கோர்ட்டில் எந்த மதிப்பும் இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்