மும்பை-தானே இடையே விரைவில் சொகுசு பஸ் சேவை- பெஸ்ட் குழுமம் ஏற்பாடு

மும்பையில் பெஸ்ட் குழுமம் சார்பில் மும்பை-தானே இடையே பிரீமியம் சொகுசு பஸ் சேவை தொடங்கப்பட உள்ளது. செயலி மூலம் மட்டும் முன்பதிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2022-12-10 00:15 IST

மும்பை, 

மும்பையில் பெஸ்ட் குழுமம் சார்பில் மும்பை-தானே இடையே பிரீமியம் சொகுசு பஸ் சேவை தொடங்கப்பட உள்ளது. செயலி மூலம் மட்டும் முன்பதிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொகுசு பஸ்கள் அறிமுகம்

மும்பை மாநகராட்சியின் பெஸ்ட் குழுமம் சார்பில் மும்பை - தானே இடையே சலோ என்ற குளிர்சாதன சொகுசு வசதி கொண்ட பிரீமியம் பஸ்கள் விரைவில் அறிமுகப்படுத்தபட உள்ளது. இது பற்றி பெஸ்ட் குழும அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மும்பை மக்களின் வசதிக்காக ஏ.சி. வசதி கொண்ட பிரீமியம் பஸ்கள் இயக்கப்பட உள்ளது. மின்சாரத்தில் இயங்கும் இந்த பஸ்கள் தானே முதல் பி.கே.சி. இடையே ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் இயக்கப்படும்.

தானே-பி.கே.சி இடையே காலை 7 மணி முதல் 8.30 வரையிலும், பி.கே.சி-தானே இடையே மாலை 5.30 மணியில் இருந்து இரவு 7 மணி வரையும் சேவை இருக்கும்.

நின்று பயணிக்க அனுமதி இல்லை

இதைத்தவிர பி.கே.சி-பாந்திரா ஸ்டேசன் வழித்தடத்தில் காலை 8.50 மணி முதல் மாலை 5.50 மணி வரையிலும், மறுமார்க்கமாக காலை 9.25 மணி முதல் மாலை 6.25 மணி வரையில் இயங்கும்.

இந்த பஸ்களில் சலோ செயலி மூலம் மட்டும் இருக்கையை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பஸ்களில் பயணிகள் நிற்க அனுமதி கிடையாது. சொகுசு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது.

மாதந்திர சீசன் டிக்கெட் வசதி செய்யப்பட்டு உள்ளது. ஒரு வழிப்பயணமாக இந்த பஸ்சில் பாந்திரா ஸ்டேசனில் இருந்து பி.கே.சி.க்கு ரூ.50, விரைவு வழித்தடமான பி.கே.சி.யில் இருந்து தானேக்கு ரூ.205 ஆக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. வருகிற நாட்களில் மேலும் 200 மின்சார பஸ்கள் சேவையை சேர்க்க திட்டமிடப்பட்டு உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்