டேட்டிங் செயலியில் அறிமுகமான ஆசாமியிடம் ரூ.2¾ லட்சத்தை இழந்த மும்பை பெண்
டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான ஆசாமியிடம் மும்பையை சேர்ந்த பெண் ரூ.2¾ லட்சத்தை இழந்த சம்பவம் நடந்து உள்ளது.;
மும்பை,
டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான ஆசாமியிடம் மும்பையை சேர்ந்த பெண் ரூ.2¾ லட்சத்தை இழந்த சம்பவம் நடந்து உள்ளது.
டேட்டிங் செயலி மூலம் அறிமுகம்
சமூகவலைதளங்கள் மூலம் வெளிநாட்டு டாக்டர், தொழில் அதிபர் என கூறி பெண்களை குறிவைத்து ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருகிறது. இந்த மோசடி கும்பலின் வலையில் சிக்கி மலாடு பகுதியை சேர்ந்த பெண்ணான வீட்டு உள்அலங்கார நிபுணர் பணத்தை இழந்து உள்ளார். மலாடு பகுதியை சேர்ந்த 33 வயது பெண்ணுக்கு டேட்டிங் செயலி மூலம் இங்கிலாந்தை சேர்ந்த ஜீத் மல்கார்ஜித் என்ற டாக்டர் அறிமுகம் ஆனார்.
மோசடி ஆசாமியான அவரை பெண் உண்மையில் வெளிநாட்டு டாக்டர் என நம்பினார். மேலும் அவரை நேரில் சந்திக்க வேண்டும் என விரும்பினார். இந்தநிலையில் கடந்த 13-ந்தேதி மோசடி ஆசாமி, பெண்ணை சந்திக்க இந்தியா வருவதாக கூறினார். மேலும் வரும்போது பெண்ணுக்கு விலை உயர்ந்த அன்பளிப்புகளை வாங்கி வருவதாக பொய்களை அள்ளி வீசினார்.
ரூ.2¾ லட்சம் மோசடி
இந்தநிலையில் 21-ந் தேதி டெல்லி விமான நிலையத்தில் இருந்து அதிகாரி என கூறிக்கொண்டு ஒருவர் பேசினார். அவர் இங்கிலாந்து டாக்டர் ஜீத் மல்கார்ஜித் அதிகளவு வெளிநாட்டு பணம், விலை உயர்ந்த பொருட்களுடன் சிக்கி இருப்பதாகவும், அவற்றை விடுவிக்க வரி கட்ட வேண்டும் என கூறினார்.
இதை உண்மையென நம்பிய மலாடு பெண் அவர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.2¾ லட்சம் வரை அனுப்பினார். அதன்பிறகு பெண்ணை சந்திக்க வெளிநாட்டு டாக்டரும் வரவில்லை, அவரது அன்பளிப்பும் வரவில்லை.
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண் மலாடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் நூதன மோசடியில் ஈடுபட்டவரை வலைவீசி தேடி வருகின்றனர்.