நாடாளுமன்ற தேர்தல் தோல்வி பயத்தில் கூட்டணி கட்சிகளுக்கு பா.ஜனதா முக்கியத்துவம் கொடுக்கிறது- தேசியவாத காங்கிரஸ் சொல்கிறது
நாடாளுமன்ற தேர்தல் தோல்வி பயத்தில் பா.ஜனதா தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க தொடங்கி உள்ளதாக தேசியவாத காங்கிரஸ் கூறியுள்ளது.;
மும்பை,
நாடாளுமன்ற தேர்தல் தோல்வி பயத்தில் பா.ஜனதா தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க தொடங்கி உள்ளதாக தேசியவாத காங்கிரஸ் கூறியுள்ளது.
எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு
புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவை ஜனாதிபதியை வைத்து நடத்தாததை எதிர்க்கட்சிகள் கண்டித்து வருகின்றன. மேலும் விழாவில் கலந்துகொள்ள போவதில்லை என்று 19 எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.இது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் கிளைட் கிராஸ்டோ நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
கூட்டணிக்கு முக்கியத்துவம்
நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்துகொள்வதில்லை என்று அறிவித்துள்ள கட்சிகள் ஜனநாயக நெறிமுறைகளை மதிக்கவில்லை என தேசிய ஜனநாயக கூட்டணி பெயரில் பா.ஜனதா அறிக்கை வெளியிட்டு உள்ளது. கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சியின் மோசமான செயல்பாடு மற்றும் தோல்விக்கு பிறகு பலவீனமாகி விட்டதை பா.ஜனதா உணர தொடங்கி உள்ளது. அவர்களுக்கு தற்போது "தலைமை கவர்ச்சி மற்றும் அலை" நீடிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதனால் 2024-ல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் தோல்வியில் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள பா.ஜனதா இப்போது தேசிய ஜனநாயக கூட்டணியை ஊன்றுகோலாக பயன்படுத்த முடிவு செய்துள்ளது. தனித்து வெற்றி பெற முடியாது என்ற எண்ணத்தில் கூட்டணிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.