கடற்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

மும்பையில் ஐ.என்.எஸ். சென்னை போர் கப்பலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த கடற்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.;

Update:2022-11-14 00:15 IST

மும்பை, 

மும்பையில் ஐ.என்.எஸ். சென்னை போர் கப்பலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த கடற்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

இந்திய கடற்படை வீரர் ஹேப்பி சிங் தோமர்(வயது25). இவர் நேற்று முன்தினம் மும்பை துறைமுகப்பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த ஐ.என்.எஸ். சென்னை போர்க்கப்பலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். பாதுகாப்பு பணியில் ஈடுபட அவரிடம் 9 எம்.எம். ரக துப்பாக்கி கொடுக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் அவர் நேற்று முன்தினம் மதியம் கப்பலில் உள்ள ஒரு அறைக்கு சென்றார். திடீரென அந்த அறையில் இருந்து துப்பாக்கியால் சுடும் சத்தம்கேட்டது. இதையடுத்து மற்ற வீரர்கள் அங்கு ஓடிச்சென்று பார்த்தனர்.

அப்போது, ஹேப்பிசிங் தோமர் மார்பில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் ரத்தவெள்ளத்தில் கிடந்தார். உடனடியாக அவர் கடற்படை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

விசாரணையில், ஹேப்பி சிங் தோமர் துப்பாக்கில் சுட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

குடும்ப பிரச்சினை?

எதற்காக அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து தெரியவில்லை. குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேபோல சம்பவம் தொடர்பாக கொலபா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் கடற்படை வீரர் பயன்படுத்திய துப்பாக்கியையும் கைப்பற்றி உள்ளனர்.

கடற்படை வீரர் போர்க்கப்பலில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்