தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரும்- ஏக்நாத் ஷிண்டே நம்பிக்கை
அடுத்த தேர்தலில் பிரதமர் மோடி அனைத்து சாதனைகளையும் முறியடிப்பார், தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரும் என முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.;
மும்பை,
அடுத்த தேர்தலில் பிரதமர் மோடி அனைத்து சாதனைகளையும் முறியடிப்பார், தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரும் என முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.
மோடி கலந்துரையாடல்
பிரதமர் மோடி நேற்று பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களிடம் 'பரிக்சா இ சர்ச்சா' என்ற தலைப்பில் கலந்துரையாடினார். தானேயில் கிசான் நகர் பகுதி மாநகராட்சி பள்ளியில் மாணவர்கள் மோடியின் பேச்சை கேட்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அங்கு நடந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கலந்து கொண்டார். அவர் மாணவர்களுடன் சேர்ந்து மோடியின் பேச்சை கேட்டார்.
ஏக்நாத் ஷிண்டே கிசான்நகர் மாநகராட்சி பள்ளியின் முன்னாள் மாணவர் ஆவார். நிகழ்ச்சிக்கு பிறகு ஏக்நாத் ஷிண்டே பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
சூழல் மாறி உள்ளது
அப்போது அவரிடம் சமீபத்தில் மாநிலத்தில் நடந்த அரசியல் நிலவரம் தொடர்பாக வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அவர் கூறியதாவது:-
கருத்து கணிப்பு வெகு சிலரிடம் மட்டும் நடத்தப்படுகிறது. அது உண்மையான நிலவரத்தை கூறாது. சமீபத்தில் நடந்து முடிந்த பஞ்சாயத்து தேர்தல்களில் பா.ஜனதா - பாலாசாகேபாஞ்சி சிவசேனா சிறந்த வெற்றியை பெற்று இருந்தது. அதன் முடிவுகள் கருத்துகணிப்பில் புறக்கணிக்கப்பட்டு இருந்தது. அரசியலில் 2-ம், 2-ம் எப்போதும் 4 ஆகாது.
கருத்து கணிப்பை எத்தனை பேர் நடத்தினார்கள் என்ற விவரம் எனக்கு தெரியும். எனவே அதன் முடிவில் செல்ல நான் விரும்பவில்லை. கடந்த 2½ ஆண்டுகளாக மாநிலத்தில் எதிர்மறையான ஆட்சி நடந்தது. தற்போது நேர்மறையான அரசாங்கம் செயல்படுகிறது. நாங்கள் பல வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்து உள்ளோம். மாநிலத்தின் சூழலே மாறி உள்ளது. யார், யாருடன் கூட்டணி சேருவார், எந்த கூட்டணி உடையும் என என்னால் இப்போது கூறமுடியாது.
மீண்டும் ஆட்சி
பாலாசாகேபஞ்சி சிவசேனா, பா.ஜனதா சிறந்த பணிகளை செய்து வருகிறது. இது சாமானியர்களுக்கான அரசு. மக்கள் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என முடிவு செய்துவிட்டனர். மக்களின் உணர்வை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரும், பிரதமர் மோடியின் செல்வாக்கு அதிகரிக்கும் என ஆய்வு கூறுகிறது. மராட்டியத்தில் மட்டும் என்ன வித்யாசம் இருக்க போகிறது?. அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பிரதமா் மோடி அனைத்து சாதனைகளையும் முறியடிப்பார். மிகப்பெரிய பெரும்பான்மையில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.