குறைந்த விலைக்கு கேட்கப்பட்டதால் நாசிக் சந்தைகளில் வெங்காய ஏலம் மீண்டும் நிறுத்தம்

குறைந்த விலைக்கு கேட்கப்பட்டதால் நாசிக் மாவட்ட சந்தைகளில் தொடங்கிய வெங்காய ஏலம் மீண்டும் நிறுத்தப்பட்டது. மத்திய அரசு ஏற்றுமதி வரியை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2023-08-25 00:15 IST

மும்பை, 

குறைந்த விலைக்கு கேட்கப்பட்டதால் நாசிக் மாவட்ட சந்தைகளில் தொடங்கிய வெங்காய ஏலம் மீண்டும் நிறுத்தப்பட்டது. மத்திய அரசு ஏற்றுமதி வரியை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடங்கிய ஏலம்

தக்காளியை தொடர்ந்து வெங்காயத்தின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டதை அடுத்து, மத்திய அரசு வெங்காய ஏற்றுமதி வரியை டிசம்பர் மாதம் வரை 40 சதவீதம் அதிகரித்து உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மராட்டியத்தில் வெங்காய வியாபாரிகள், விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாட்டிலேயே பெரிய வெங்காய சந்தையான லாசல்காவ் மார்க்கெட் உள்பட அந்த மாவட்டத்தில் பல சந்தைகளில் வெங்காய ஏலம் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய மந்திரி பாரதி பவார் மராட்டியத்தை சேர்ந்த வெங்காய வியாபாரிகள், ஏற்றுமதியாளர்கள், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து இன்று (வியாழக்கிழமை) முதல் நாசிக் மார்க்கெட்டுகளில் மீண்டும் வெங்காய ஏலத்தை தொடங்குவது என முடிவு செய்யப்பட்டது.

இதன்படி நேற்று காலை 8.30 மணியளவில் நாசிக் லாசல்காவ், பிம்பல்காவ், சந்த்வாட் உள்ளிட்ட மார்க்கெட்டுகளில் வெங்காய ஏலம் தொடங்கியது.

மீண்டும் நிறுத்தம்

இந்தநிலையில் ஏலத்தில் குறைந்த விலைக்கு வெங்காயம் எடுக்கப்பட்டதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர். சுமார் 15 நிமிடங்களில் ஏலம் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. விவசாயிகளிடம் குவிண்டாலுக்கு ரூ.2 ஆயிரத்து 410-க்கு வெங்காயம் கொள்முதல் செய்யப்படும் என மத்திய அரசு உறுதி அளித்து இருந்தது. ஆனால் அந்த தொகைக்கு குறைவாக வெங்காயம் ஏலம் போனதால், விவசாயிகள் ஏலத்தை நிறுத்தியதாக கூறப்படுகிறது.

இதேபோல ஏலத்தின் போது மத்திய அரசு என்.ஏ.எப்.இ.டி. அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது.

சாலை மறியல்

வெங்காய ஏலம் குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ''லாசல்காவ் மார்க்கெட்டுக்கு 300 வாகனங்களில் வெங்காயம் ஏலத்துக்கு வந்தது. குவிண்டால் வெங்காயம் குறைந்தபட்சம் ரூ.600-க்கும், அதிகபட்சம் ரூ.2 ஆயிரத்து 500-க்கும் ஏலம் போனது. சராசரியாக குவிண்டால் வெங்காயம் ரூ.2 ஆயிரத்து 251-க்கு ஏலம் போனது. சந்த்வாட் மார்க்கெட்டில் ரூ.1,700 முதல் ரூ.1,800 வரை வெங்காயம் ஏலம் போனது" என்றார்.

இதற்கிடையே மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு விதித்து உள்ள 40 சதவீத வரியை திரும்பபெற வலியுறுத்தி சந்த்வாட் மாவட்டத்தில் உள்ள மும்பை- ஆக்ரா நெடுஞ்சாலையில் சுமார் 500 விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்