பா.ஜனதாவில் சேர்க்கப்படாத பொருளாதார குற்றவாளிகளில் மெகுல் சோக்சி, நிரவ் மோடி, விஜய் மல்லையா மட்டுமே பாக்கி - உத்தவ் சிவசேனா கிண்டல்

பா.ஜனதாவில் சேர்க்கப்படாத பொருளாதார குற்றவாளிகளில் மெகுல் சோக்சி, நிரவ் மோடி, விஜய் மல்லையா மட்டுமே பாக்கி உள்ளனர் என உத்தவ் சிவசேனா கேலி செய்துள்ளது.;

Update:2023-07-06 01:15 IST

மும்பை, 

பா.ஜனதாவில் சேர்க்கப்படாத பொருளாதார குற்றவாளிகளில் மெகுல் சோக்சி, நிரவ் மோடி, விஜய் மல்லையா மட்டுமே பாக்கி உள்ளனர் என உத்தவ் சிவசேனா கேலி செய்துள்ளது.

சாம்னா தலையங்கம்

மராட்டிய பா.ஜனதா கூட்டணி அரசில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவாரும், அவரது கட்சியை சேர்ந்த 8 பேரும் இணைந்தனர். இதுகுறித்து முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையிலான உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான 'சாம்னா'வின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-

கோர்ட்டு தீர்ப்பு

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பிளவுக்கு பின்னால் டெல்லியில் உள்ள மாபெரும் சக்திகள் உள்ளன. ஒரு கட்சியின் சட்டமன்ற குழு, கட்சியின் அமைப்பு மற்றும் அதன் சின்னத்தின் மீது உரிமை கோர முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு ஒன்று தெளிவாக கூறி உள்ளது. பா.ஜனதாவுக்கு ஊழல், ஒழுக்கம் மற்றும் மோசடி பற்றி பேச எந்த அடிப்படை உரிமையும் இல்லை. மராட்டியத்தில் பா.ஜனதா செய்துவரும் காரியங்களுக்காக கேலி செய்யப்படுகிறது. பொருளாதார குற்ற வழக்கில் சிக்கிய மெகுல் சோக்சி, நிரவ் மோடி மற்றும் விஜய் மல்லையா போன்றவர்களை மட்டுமே கட்சியில் சேர்ந்துகொள்ளாமல் உள்ளனர். இதில் ஒருவருக்கு கட்சியின் தேசிய பொருளாளராகவும், 2-வது நபருக்கு நிதி ஆயோக்கிலும், 3-வது நபரை ரிசர்வ் வங்கி கவர்னராகவும் நியமிக்க வேண்டும்.

இலாகா ஒதுக்கீடு

2014-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு நீர்ப்பாசன ஊழல் வழக்கில் அஜித்பவார் சிறைக்கு செல்வார் என துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசிவந்தார். ஆனால் தற்போது அவரின் கண் முன்பே கடந்த ஞாயிற்றுக்கிழமை அஜித்பவார் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்கிறார். புதிய மந்திரிகளுக்கான இலாகா ஒதுக்கீடு குறித்த ஆலோசனை முதல்-மந்திரியின் அதிகாரப்பூர்வ இல்லமான வர்ஷாவில் நடந்திருக்க வேண்டும். ஆனால் இந்த பேச்சுவார்த்தை துணை முதல்-மந்திரி பட்னாவிசின் பங்களாவில் நடக்கிறது. இது முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவுக்கு வருத்தம் அளிக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்