ஆஸ்பத்திரிக்கு வெளியே பிரசவம்; குழந்தை உயிரிழந்த பரிதாபம்

யவத்மாலில் ஆரம்ப சுகாதார நிலைய ஆஸ்பத்திரிக்கு வெளியே பெண்ணுக்கு பிரசவம் நடந்தது. இதில் பிறந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.;

Update:2022-08-20 18:37 IST

மும்பை, 

யவத்மாலில் ஆரம்ப சுகாதார நிலைய ஆஸ்பத்திரிக்கு வெளியே பெண்ணுக்கு பிரசவம் நடந்தது. இதில் பிறந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

டாக்டர், ஊழியர்கள் இல்லை

யவத்மால் மாவட்டம் உமர்கேட் தாலுகா பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக கர்ப்பிணியை அவரது குடும்பத்தினர் விதுல் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதில் ஆரம்ப சுகாதார வாசலிலேயே பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. எனினும் அந்த குழந்தை சிறிது நேரத்தில் உயிரிழந்தது.

இந்தநிலையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர், ஊழியர்கள் யாரும் இல்லாததால் தான் குழந்தை இறந்ததாக பெண்ணின் குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.

அதிகாரி மறுப்பு

இதுகுறித்து பெண்ணின் தந்தை கூறுகையில், " எனது மகளுக்கு பிரசவ வலி ஏற்பட்டவுடன் ஆம்புலன்சுக்கு ஏற்பாடு செய்ய முடியாததால், ஆட்டோவில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து வந்தோம். ஆனால் நாங்கள் வந்த போது இங்கு டாக்டர், மருத்துவ ஊழியர்கள் யாரும் இல்லை. எனது மகளுக்கு ஆரம்ப சுகாதார மையம் வெளியில் உள்ள வரண்டாவிலேயே குழந்தை பிறந்துவிட்டது. சிறிது நேரத்தில் பிறந்த குழந்தை இறந்துவிட்டது " என்றார்.

எனினும் பெண்ணின் குடும்பத்தினரின் குற்றச்சாட்டை மாவட்ட சுகாதார அதிகாரி பிரக்லாத் சவ்கான் மறுத்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், " சம்பவத்தின் போது மருத்துவ அதிகாரி, நர்சுகள் ஆரம்ப சுகாதார மையத்தில் இருந்து உள்ளனர். அந்த பெண் தாமதமாக மையத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளார் " என்றார்.


மேலும் செய்திகள்