தானே,
தானே மாவட்டம் பிவண்டியில் உள்ள குடோனில் இருந்து மிராபயந்தரை சேர்ந்த எலக்ட்ரானிக் கடைக்கு டெம்போவில் செல்போன்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் போன்றவை கொண்டு வரப்பட்டது. இந்த டெம்போ காஷிமிராவில் உள்ள பென்கர்பாடா பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது மர்ம ஆசாமிகள் சிலர் அந்த டெம்போவில் இருந்த ரூ.22 லட்சம் மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்களை கொள்ளை அடித்து விட்டு தப்பி சென்றனர். இது பற்றி காஷிமிரா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் ஒருவரின் அடையாளம் தெரியவந்தது. இவர் குஜராத் மாநிலம் வல்சாட் பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று அவரை பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.21 லட்சத்து 59 ஆயிரம் மதிப்புள்ள திருட்டு பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றொருவரை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்ட நபர் மீது மும்பை, தானே, வல்சாட் போன்ற இடங்களில் 10 வழக்குகள் பதிவாகி உள்ளதாக தெரியவந்தது.