பெண்ணை பழக வைத்து வியாபாரியிடம் ரூ.7 லட்சம் பறிப்பு

பெண்ணை பழக வைத்து வியாபாரியிடம் ரூ.7 லட்சம் பறிக்கப்பட்டது. இது தொடர்பாக பெண், அவரது கணவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2023-05-18 00:15 IST

தானே, 

பெண்ணை பழக வைத்து வியாபாரியிடம் ரூ.7 லட்சம் பறிக்கப்பட்டது. இது தொடர்பாக பெண், அவரது கணவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

வியாபாரி

தானேயை சேர்ந்த வியாபாரி ஒருவர் ஸ்ரீநகர் பகுதியில் மூக்கு கண்ணாடி கடை நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெண் ஒருவர் வாடிக்கையாளராக அங்கு வந்தார். வியாபாரியிடம் நைசாக பேச்சு கொடுத்து நட்பாக பழகி வந்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் 1-ந் தேதி அப்பெண் வியாபாரியை தொடர்பு கொண்டு தானே செக்நாக்காவில் உள்ள கடையில் இருப்பதாகவும், துணி வாங்க பண உதவி தேவைப்படுவதாகவும் தெரிவித்தார். இதனை நம்பிய வியாபாரி அப்பெண் தெரிவித்த கடைக்கு சென்றார். அங்கு அப்பெண்ணுடன் அவரது கணவர் நின்றிருந்தார்.

மிரட்டல்

அப்போது பெண்ணின் கணவர் வியாபாரியிடம் தனது மனைவியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை காட்டி போலீசில் மானபங்கம் புகார் கொடுக்கப்போவதாக மிரட்டினார். திடீரென மேலும் 2 பேர் அங்கு வந்தனர். அவர்கள் உடனடியாக ரூ.50 ஆயிரம் தர வேண்டும் என்று மிரட்டினர்.

அப்போது தான் பெண்ணை தன்னிடம் பழக வைத்து, அந்த கும்பல் பணம் பறிக்கும் சம்பவங்களில் ஈடுபட்டது வியாபாரிக்கு தெரியவந்தது. 'ஹனி டிரப்' எனப்படும் இந்த மோசடி மூலம் வியாபாரியிடம் பெண்ணின் கணவர் ஏற்கனவே ரூ.6 லட்சத்து 90 ஆயிரம் வரை பறித்ததாகவும், மீண்டும் 50 ஆயிரம் பறிக்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து வியாபாரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பெண், அவரது கணவர் உள்பட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்