மும்பை,
ரத்னகிரி மாவட்டம் பார்சு கிராம பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்க மராட்டிய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை ராஜாபூர் தாலுகா பார்சு மற்றும் சோல்காவ் கிராமத்தில் சுத்திகரிப்பு ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்தனர். தடியடி நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தவ் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறியதாவது:-
சுத்திகரிப்பு ஆலை திட்டத்தில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லை. ஒருங்கிணைப்பு என்பது சவுதி அரேபியாவை சேர்ந்த இஸ்லாமிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்திற்கும், இந்துத்வாவாதி அரசுக்கும் இடையே தான் இருக்கிறது. ஒரு இஸ்லாமிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்காக மண்ணின் மைந்தர்களான ரத்னகிரியை சேர்ந்த மராத்தி மக்கள் தாக்கப்படுகின்றனர். இதுதான் அவர்களின் இந்துத்வா.
இவ்வாறு அவர் கூறினார்.