சரத்பவார், அஜித்பவார் சந்திப்பால் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் குழப்பமில்லை; உத்தவ் சிவசேனா தகவல்
சரத்பவார், அஜித்பவார் சந்திப்பால் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் குழப்பம் இல்லை என உத்தவ் பாலாசாகேப் சிவசேனா கட்சி தலைவர் கூறினார்.;
மும்பை,
சரத்பவார், அஜித்பவார் சந்திப்பால் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் குழப்பம் இல்லை என உத்தவ் பாலாசாகேப் சிவசேனா கட்சி தலைவர் கூறினார்.
ரகசிய சந்திப்பு
மராட்டியத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், சரத்பவாரின் அண்ணன் மகனுமான சரத்பவார் உள்பட அக்கட்சியை சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்கள் சமீபத்தில் ஆளும் பா.ஜனதா தலைமையிலாக கூட்டணியில் இணைந்தனர். அஜித்பவார் துணை முதல்-மந்திரியாகவும், 8 பேர் மந்திரிகளாகவும் பதவியேற்றனர். ஆனால் இதற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டது. இந்தநிலையில் புனேயில் உள்ள தொழிலதிபர் வீட்டில் சரத்பவாரும், துணை முதல்-மந்திரி அஜித்பவாரும் ரகசியமாக சந்தித்த வீடியோ வெளியாகி உள்ளது. இது மகா விகாஸ் அகாடி கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
கூட்டணியில் குழப்பமா?
இந்தநிலையில் தற்போது அவுரங்காபாத்தில் 2 நாள் சுற்றுப்பயணத்தில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரை உத்தவ் பாலாசாகேப் சிவசேனா கட்சியின், மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் அம்பாதாஸ் தன்வே சந்தித்து பேசினார். இது குறித்து அம்பாதாஸ் தன்வே கூறியதாவது:- சரத்பவார் அவுரங்காபாத் வந்தார். எனவே அவரை நேரில் சந்தித்தேன். ஒருமாதம் அல்லது 2 மாதங்களுக்கு ஒருமுறை அவரை சந்திப்பேன். சரத்பவார், அஜித்பவார் சந்திப்பால் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் குழப்பம் இருப்பதாக யார் கூறினார்கள்?. பொதுமக்கள் மற்றும் சில கட்சிக்காரர்கள் மத்தியில் குழப்பம் இருக்கலாம். ஆனால் முதிர்ந்த தலைவர்கள் அனைத்து விஷயங்களையும் நன்கு அறிந்தவர்கள். அவர்களுக்கு அனைத்தும் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.