வகுப்புவாத சக்திகளை எதிர்த்து போராடுவதே மிகப்பெரிய சாவல்- சரத்பவார் பேச்சு
வகுப்புவாத சக்திகளை எதிர்த்து போராடுவதே நம்முன் உள்ள மிகப்பெரிய சவால் என்று சரத்பவார் கூறி உள்ளார்.;
மும்பை,
வகுப்புவாத சக்திகளை எதிர்த்து போராடுவதே நம்முன் உள்ள மிகப்பெரிய சவால் என்று சரத்பவார் கூறி உள்ளார்.
கர்நாடக வெற்றி
கர்நாடகாவில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சியை தோற்கடித்து 5 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி மீட்டும் ஆட்சியை கைப்பற்றியது. இந்த வெற்றி எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக அமைந்துள்ளது. இது குறித்து அகமதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் கூறியதாவது:-
சாமானியர்கள் அழிக்கப்படுவார்கள்...
நமது நாட்டை ஆளும் சில சக்திகள் சாதி மற்றும் மத அடிப்படையில் மக்களை தூண்டிவிட்டு நமது நாட்டை பின்னோக்கி கொண்டு செல்கின்றன. அவர்கள் அதிகாரத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்தாமல், மக்களிடையே பிளவை ஏற்படுத்தவே பயன்படுத்துகிறார்கள்.
இந்த சக்திகளை எதிர்த்து போராடுவதே நாம் அனைவருக்கும் முன்பு இருக்கும் மிகப்பெரிய சவாலாகும். அப்படி செய்யாவிட்டால் சாமானிய மக்கள் அழிக்கப்படுவார்கள். அகமதுநகர் ஒரு முற்போக்கான மாவட்டம். இருந்தாலும் சமீபத்தில் இங்குள்ள சேவ்கானில் இரு பிரிவினரிடையே சமூக பதற்றம் நிலவியது.
ஒரு லட்சம் பேர்
கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் படிப்படியாக நிலைமை மாறி வருவதை நமக்கு காட்டுகிறது. அங்கு சாமானிய மக்களின் அரசு பதவியேற்றுள்ளது. நேற்று முதல்-மந்திரி சித்தராமையா பதவியேற்பு விழாவில் ஒரு லட்சம் பேர் கலந்துகொண்டனர். இதில் 70 சதவீதம் பேர் சமூகத்தின் பல்வேறு அடுக்குகளை சேர்ந்த இளைஞர்கள் ஆவர்.
புதிய முதல்-மந்திரி மாநிலத்தின் நலிந்த பிரிவினரின் நன்மைக்காக உழைப்பதுடன், அனைவரையும் ஒன்றிணைத்து அழைத்து செல்வார். தொழிலாளர் வர்க்கம் வலுவாகவும், ஒற்றுமையாகவும் இருந்தால், கர்நாடக சட்டசபை தேர்தலில் நாம் பார்த்ததை நாட்டின் பிற இடங்களிலும் பிரதிபலிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.