மும்பை மாநகராட்சியில் உள்ள கட்சி அலுவலகங்களுக்கு 'சீல்' வைப்பு
சிவசேனா 2 அணியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து மும்பை மாநகராட்சி தலைமையகத்தில் உள்ள கட்சி அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.;
மும்பை,
சிவசேனா 2 அணியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து மும்பை மாநகராட்சி தலைமையகத்தில் உள்ள கட்சி அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இரு அணியினர் இடையே மோதல்
மும்பை மாநகராட்சி தலைமையகம் சி.எஸ்.எம்.டி.யில் உள்ளது. தலைமையக கட்டிடத்தின் தரை தளத்தில் அரசியல் கட்சிகளின் அலுவலகம் உள்ளது. சிவசேனா கட்சியின் அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் மாலை ஏக்நாத் ஷிண்டே அணியை சேர்ந்த ராகுல் செவாலே எம்.பி., முன்னான் நிலைக்குழு தலைவர் யஷ்வந்த் ஜாதவ், முன்னாள் கவுன்சிலர் சீத்தல் மாத்ரே உள்ளிட்டவர்கள் வந்தனர். அவர்கள் கட்சி அலுவலகத்துக்கு வந்ததை உத்தவ் பால் தாக்கரே அணியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர்கள் ஆஷிஸ் செம்பூர்கார், சச்சின் பட்வால் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருதரப்பினரும் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து மாநகராட்சி தலைமையகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் வந்து அனைவரையும் அலுவலகத்தில் இருந்து வெளியேற்றி நிலைமையை கட்டுபடுத்தினர். மேலும் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள சிவசேனா அலுவலகத்துக்கு சீல் வைத்தனர்.
கட்சி அலுவலகங்களுக்கு சீல்
இந்தநிலையில் நேற்று காலை மாநகராட்சி தலைமையகத்துக்கு சென்ற மற்ற கட்சியின் முன்னாள் கவுன்சிலர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மாநகராட்சி தலைமையகத்தில் இருந்த பா.ஜனதா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சியின் அலுவலகங்களுக்கும் சீல் வைக்கப்பட்டு இருந்தது.
சிவசேனா இரு அணியினர் இடையே கட்சி அலுவலகம் பயன்படுத்துவது தொடர்பாக ஏற்பட்ட மோதலை அடுத்து மாநகராட்சி இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளது.
இது குறித்து மாநகராட்சி கமிஷனர் இக்பால் சகால் கூறுகையில், "புதன்கிழமை மாநகராட்சி தலைமையகத்தில் நடந்த சம்பவத்தை அடுத்து போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் அனைத்து கட்சி அலுவலகங்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது" என்றார்.
முன்னதாக நேற்று சிவசேனா உத்தவ் பால் தாக்கரே அணி முன்னாள் கவுன்சிலர்கள் மாநகராட்சி தலைமை அலுவலகம் வந்தனர். அவர்கள் கட்சி அலுவலகத்தை திறக்க வலியுறுத்தி மாநகராட்சி கமிஷனர் இக்பால் சகால் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.