சுயசரிதையில் தனது கார் டிரைவரை புகழ்ந்த சரத்பவார்- '43 ஆண்டுகளில் ஒரு விபத்தை கூட ஏற்படுத்தவில்லை'

43 ஆண்டுகளில் ஒரு விபத்தை கூட ஏற்படுத்தவில்லை என சுயசரிதை புத்தகத்தில் சரத்பவார் தனது கார் டிரைவரை புகழ்ந்து உள்ளார்.;

Update:2023-05-05 00:15 IST

மும்பை, 

43 ஆண்டுகளில் ஒரு விபத்தை கூட ஏற்படுத்தவில்லை என சுயசரிதை புத்தகத்தில் சரத்பவார் தனது கார் டிரைவரை புகழ்ந்து உள்ளார்.

விபத்தை சந்தித்தது இல்லை

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் புதுப்பிக்கப்பட்ட சுயசரிதை புத்தகம் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. அந்த புத்தகத்தில் சரத்பவார் தன்னிடம் 43 ஆண்டுகளாக டிரைவராக உள்ள காமாவை வெகுவாக பாராட்டி உள்ளார். தனது டிரைவர் குறித்து அவர் சுயசரிதை புத்தகத்தில் கூறியிருப்பதாவது:-

எனது வெற்றிகரமான பொது வாழ்க்கையில் எனது தனிப்பட்ட டிரைவர் காமா உள்பட சில நெருக்கமான ஊழியர்களை பெற்று இருக்கிறேன். அவர் 43 ஆண்டுகளாக என்னுடன் உள்ளார். அவர் மாநிலத்தின் எல்லா மூலைகளுக்கும் என்னை கொண்டு சென்று இருக்கிறார். ஆனால் ஒரு முறை கூட விபத்தை சந்தித்தது இல்லை. இதன் மூலம் அவர் எவ்வளவு பொறுப்புடன் என்னை கொண்டு சென்றார் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

ஒரு வார்த்தை கூடவெளியில் செல்லாது

என்னுடன் ஒரே காரில் மூத்த அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், பிரமுகர்கள், கட்சியினர் வந்து இருக்கிறார்கள். பல முக்கியமான விவகாரங்கள் பற்றி அவர்களுடன் காரில் விவாதித்து இருக்கிறேன். நான் அவர்களிடம் பேசும் ஒரு வார்த்தை கூட வெளியில் செல்லாது. அந்த அளவுக்கு அவர் எனது நம்பிக்கையை பெற்று இருக்கிறார்.

காமா என்னிடம் வருவதற்கு முன் பாராமதியை சேர்ந்த டாக்டர் எம்.ஆர். ஷாவிடம் டிரைவராக இருந்தார். அந்த நேரத்தில் நான் அங்கம் வகித்த கட்சியில் இருந்து எனக்கு கார் கொடுத்தனர். ஆனால் அதற்கு டிரைவர் இல்லை. அதுதொடர்பாக ஒருநாள் சாதாரணமாக எம்.ஆர்.ஷாவிடம் கூறினேன். அவர் உடனடியாக காமாவை என்னிடம் வேலைக்கு அனுப்பி வைத்தார். அன்று முதல் அவர் எனக்காக ஓய்வில்லாமல் உழைத்து வருகிறார்.

காப்பாளராகவும் இருப்பார்

அவர் எனது காரை மிகவும் கவனமாக பார்த்து கொள்வார். காரில் ஏதாவது பிரச்சினை என்றால் அதை ஓட்ட மறுத்துவிடுவார். கார் விவகாரத்தில் அவர் சொல்வதை தான் நான் எப்போதும் கேட்பேன். காமா எனக்காக மாநிலம் முழுவதும் பல ஆண்டுகளாக கார் ஓட்டுகிறார். அவருக்கு இடங்கள், முக்கியமானவர்களின் வீடுகள் தெரியும். எனவே எந்த தடையும் இல்லாமல் அவர் என்னை அங்கு அழைத்து செல்வார்.

இதேபோல பல நேரங்களில் அவர் எனது காப்பாளராகவும் இருப்பார். என்னை மிகவும் கவனமாக பார்த்து கொள்வார். எனது உடை, மருந்து, பயண பொருட்கள், உணவு என எல்லாவற்றையும் கவனித்து கொள்வார். நான் மதிய உணவு, மருந்தை தவறவிட்டால் எனது ஊழியர்களை கடிந்து கொள்வார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்