அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு பின்னால் பா.ஜனதா இருப்பது உறுதி- சிவசேனா கூறுகிறது
அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு ஒய்-பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கியதன் மூலம் அவர்களுக்கு பின்னால் பா.ஜனதா இருப்பது உறுதியாகி உள்ளதாக சிவசேனா கூறியுள்ளது.;
மும்பை,
அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு ஒய்-பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கியதன் மூலம் அவர்களுக்கு பின்னால் பா.ஜனதா இருப்பது உறுதியாகி உள்ளதாக சிவசேனா கூறியுள்ளது.
அரசுக்கு நெருக்கடி
சிவசேனா கட்சியை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டு உள்ளனர். இதனால் மகா விகாஸ் அகாடி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மாநிலத்தில் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சிவசேனா தொண்டர்கள் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் 15 சிவசேனா எம்.எல்.ஏ.க்களுக்கு ஒய்-பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டது. மராட்டியத்தில் வசிக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் நேற்று கூறியிருப்பதாவது:-
இரவில் கூட்டம்
சிவசேனா கட்சியில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பிரச்சினை கட்சியின் உள் விவகாரம் என பா.ஜனதா கூறியது. ஆனால் கடைசியாக பா.ஜனதா முகமூடி அவிழ்ந்துவிட்டது.
வதோதராவில் இரவின் இருளுக்குள் உபேர் பணக்காரர் ஏக்நாத் ஷண்டேவும், எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிசும் சந்தித்து பேசினர். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்திற்கு பிறகு கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்களுக்கு மத்திய அரசு உடனடியாக ஒய்-பிளஸ் பிரிவு பாதுகாப்பை வழங்கி உள்ளது. இவர்கள் தான் ஜனநாயகத்தின் பாதுகாவலர்கள்.
முதல் உதாரணம் இல்லை..
மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள பா.ஜனதா இந்த நடிகர்களுக்கு (அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்) திரைகதையை எழுதி கொடுத்து நாடகத்தை இயக்கி வருகின்றனர் என்பது இப்போது தெளிவாகி இருக்கிறது.
அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்குவதன் மூலம் மராட்டியத்திற்கு எதிரான பா.ஜனதாவின் தேசத்துரோகம் அம்பலமாகி உள்ளது.
அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி அவர்களுக்கு ஒய்-பிளஸ் பாதுகாப்பு வழங்குவது மாநில உரிமைகளை அத்துமீறுவது போன்றது. இது மத்திய அரசின் எதேச்சியதிகார நடத்தைக்கு முதல் உதாரணம் இல்லை.
ரூ.50 கோடிக்கு விற்பனை
அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு அகற்றப்படவில்லை என்று திலீப் வால்சே பாட்டீல் தெளிவுபடுத்தி உள்ளார்.
அப்படி நீக்கி இருந்தாலும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாக இது செய்யப்பட்டது என்று சொல்ல முடியாது. ஆனால் மாநில அரசு அப்படிப்பட்ட கொடூரமான நடத்தையை முன் எடுக்கவில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் அதிருப்தி எல்.எல்.ஏ.க்களை பெரிய காளைகளுடன் ஒப்பிட்டு அவர்கள் ரூ.50 கோடிக்கு விற்கப்பட்டு உள்ளதாக சாம்னா குற்றம் சாட்டி உள்ளது.