மலாடு ரெயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு- 6 மணி நேரம் மின்சார ரெயில் சேவை பாதிப்பு

மலாடு ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக சுமார் 6 மணி நேரம் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.;

Update:2023-06-14 00:15 IST

மும்பை, 

மலாடு ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக சுமார் 6 மணி நேரம் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.

சிக்னல் கோளாறு

மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் மலாடு ரெயில் நிலையம் அருகே நேற்று காலை 11.45 மணி அளவில் விரார் செல்லும் ஸ்லோ வழித்தடத்தில் திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதன்பின்னர் விரைவு வழித்தடத்திலும் இதே பாதிப்பு ஏற்பட்டது. இதனால் இரு வழித்தடங்களிலும் மின்சார ரெயில்கள் மேற்கொண்டு இயக்கமுடியாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

இதுபற்றி அறிந்த ரெயில்வே அதிகாரிகள் ஊழியர்களுடன் அங்கு சென்று கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

ரெயில் சேவை பாதிப்பு

இதற்கிடையே ரெயில்களில் இருந்த பயணிகள் இறங்கி தண்டவாளம் வழியாக நடந்து சென்றனர். விரைவு வழித்தடத்தில் கோரேகாவ் ரெயில் நிலையம் வரையில் மின்சார ரெயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன. தொலைதூர எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 5-வது வழித்தடத்தில் இயக்கப்பட்டது.

சிக்னல் கோளாறு சரிசெய்யப்பட்டதை அடுத்து சுமார் மாலை 5.45 மணி அளவில தான் அனைத்து வழித்தடங்களிலும் போக்குவரத்து சீரானது. இதன் மூலம் சுமார் 6 மணி நேரம் ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.

பயணிகள் குற்றச்சாட்டு

இதுபற்றி மேற்கு ரெயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சுமித் தாக்குர் கூறுகையில், "கோட்ட ரெயில்வே மேலாளர் தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று கோளாறு சரிசெய்யப்பட்டது" என்றார்.

மிராரோடு பகுதியை சேர்ந்த பயணி ஒருவர், மிராரோடு-அந்தேரி இடையே தூரத்தை கடக்க 30 நிமிடம் மட்டுமே ஆகும். ஆனால் அதற்கு 1 மணி நேரம் ஆனது என தெரிவித்தார்.

மாலை நேரத்தில் கூட மின்சார ரெயில் சேவை இயல்பு நிலைக்கு வரவில்லை என விராரை சேர்ந்த பயணி ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்