புத்தர், பெரியாருக்கு எதிரான அவதூறு கருத்து; சம்பாஜி பிடே மீது வழக்குப்பதிவு
தானேயில் புத்தர், பெரியார் பற்றி அவதூறு கருத்து தெரிவித்ததாக சம்பாஜி பிடே மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்;
தானே,
ஸ்ரீ சிவ் பிரதிஷ்கான் இந்துஸ்தான் அமைப்பின் நிறுவனர் சம்பாஜி பிடே. இவர் அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். சமீபத்தில் அமராவதி மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் அவர் மகாத்மா காந்தியை அவமதிக்கும் வகையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரை கைது செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இந்த நிலையில் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் நவிமும்பையில் உள்ள பன்வெல் பகுதியை சேர்ந்த வக்கீல் அமித் கதர்னாவ்ரே, நியூ பன்வெல் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் " கவுதம புத்தர், ஜோதிபா புலே மற்றும் பெரியார் ஆகியோர் குறித்து சம்பாஜி பிடே தரக்குறைவான கருத்துகளை தெரிவித்துள்ளார். இது அவர்களை பின்பற்றுபவர்களின் உணர்வுகளை புண்படுத்தக்கூடியதாகும். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். மேலும் சம்பாஜி பிடே பேசிய இழிவான கருத்துகள் அடங்கிய சில ஆன்லைன் வீடியோக்களையும் மேற்கொள் காட்டினார். இந்த புகார் குறித்து போலீசார் சம்பாஜி பிடே மீது வழக்குப்பதிவு செய்தனர்.