மைத்துனி, 2 குழந்தைகளை கொன்று உடல்களை தீ வைத்து எரித்த வாலிபர்
புனேயில் மைத்துனி மற்றும் 2 குழந்தைகளை கொன்று உடல்களை தீ வைத்து எரித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;
புனே,
புனேயில் மைத்துனி மற்றும் 2 குழந்தைகளை கொன்று உடல்களை தீ வைத்து எரித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளத்தொடர்பு
மராட்டிய மாநிலம் புனே அருகே பிசோலி கிராமத்தை சேர்ந்தவர் வைபவ் வாக்மரே(வயது30). இவர் புனே கோந்துவா பகுதியை சேர்ந்த சமீர் மசால் என்பவரின் பண்ணை வீட்டில் பராமரிப்பாளராக இருந்து வந்தார். அங்குள்ள கொட்டகையில் ஒரு வருடமாக மனைவியுடன் வசித்து வருகிறார். வைபவ் வாக்மாரேயின் மைத்துனி அம்ரபாலி(25), அவரது மகள் ரோஷிணி (6), மகன் ஆதித்யா (4) ஆகியோரும் இவர்களுடன் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் மைத்துனிக்கு வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகம் அடைந்தார்.
மைத்துனி கொலை
இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் மாலை வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த வைபவ் வாக்மாரே மைத்துனி அம்ரபாலியை கழுத்தை நெரித்து கொன்றார். மேலும் மைத்துனியின் 2 குழந்தைகளையும் ஈவு இரக்கமின்றி கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
பின்னர் உடல்களை கொட்டகை அருகே போட்டு அவற்றின் மீது படுக்கை விரிப்பு, துணி, மரக்கட்டைகளை போட்டு தீ வைத்து விட்டு தப்பி சென்றார். உடல்களில் எரிந்த தீ அருகில் உள்ள வயல்வெளியில் பற்றி எரிய தொடங்கியது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடல்கள் மீட்பு
இதன்பேரில் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். தீயை அணைத்த பிறகு நடத்திய சோதனையில் ஒரு பெண் மற்றும் 2 குழந்தைகளின் உடல்கள் எரிந்து கரிக்கட்டையாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 3 பேரின் உடல்களை மீட்டு நடத்திய விசாரணையில், மேற்கண்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
இந்த கொடூர செயலை செய்த உறவினர் வைபவ் வாக்மரேவை போலீசார் கைது செய்தனர். கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த விவகாரத்தில் மைத்துனி மற்றும் அவரது குழந்தைகளை வாலிபர் கொடூரமாக கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.