பிவண்டி அருகே ஓடும் பஸ்சில் திடீர் தீ; பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்
பிவண்டி அருகே ஓடும் பஸ்சில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பஸ்சில் இருந்த பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.;
தானே,
பிவண்டி அருகே ஓடும் பஸ்சில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பஸ்சில் இருந்த பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.
தீ விபத்து
தானே மாவட்டம் பிவண்டி நார்போலியில் இருந்து சேந்தானி கோலிவாடா நோக்கி மாநகராட்சிக்கு சொந்தமான பஸ் ஒன்று நேற்று காலை புறப்பட்டு சென்றது. இந்த பஸ்சில் 50 பயணிகள் இருந்தனர். சென்ட்ரல் மைதானம் அருகே 8.30 மணி அளவில் பஸ் சென்றபோது திடீரென என்ஜின் பகுதியில் இருந்து புகை வந்தது. சிறிது நேரத்தில் தீ பற்றி எரியத்தொடங்கியது. இதனை கண்ட டிரைவர் பஸ்சை ஓரமாக நிறுத்தினார். பின்னர் பஸ்சில் இருந்த பயணிகளை எச்சரித்து உடனடியாக கீழே இறங்கும்படி தெரிவித்தார். இதன்படி பயணிகள் பஸ்சை விட்டு கீழே இறங்கினர்.
உயிர் தப்பிய பயணிகள்
இதற்கிடையில் பஸ்சில் பற்றி தீ மற்ற இடங்களுக்கும் பரவ தொடங்கியது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று பஸ்சில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 15 நிமிடத்தில் பஸ்சில் பற்றிய தீயை முற்றிலும் அணைத்தனர். ஆனாலும் பஸ் பகுதியளவு சேதமடைந்தது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் டிரைவரின் துரித செயலால் பஸ்சில் இருந்த 50 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.