சாக்கிநாக்காவில் பூட்டி கிடந்த வீட்டில் தையல்காரர் பிணமாக மீட்பு- மனைவி தலைமறைவு
சாக்கிநாக்காவில் பூட்டி கிடந்த வீட்டில் தையல்காரர் பிணமாக மீட்கப்பட்டார். தலைமறைவான அவரது மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.;
மும்பை,
சாக்கிநாக்காவில் பூட்டி கிடந்த வீட்டில் தையல்காரர் பிணமாக மீட்கப்பட்டார். தலைமறைவான அவரது மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.
வாக்குவாதம்
மும்பை சாக்கிநாக்கா கைரானி ரோடு பகுதியை சேர்ந்தவர் நசீம்கான் (வயது23). தையல்காரர். இவரது மனைவி ருபினா. சமீபநாட்களாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்தநிலையில் கடந்த 14-ந்தேதி தானேயில் வசித்து வரும் நசீம்கானின் தந்தை ரூபினாவிற்கு போன் செய்து நசீம் கானிடம் பேசவேண்டும் என கூறினார்.
அப்போது, ரூபினா, நசீம்கான் உடல் நலம் சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருப்பதால் அவரால் பேசமுடியாது என தெரிவித்தார். இதனால் அவர் மகனை பார்ப்பதற்காக தானேயில் இருந்து சாக்கிநாக்காவில் உள்ள நசீம்கானின் வீட்டிற்கு வந்தார். அப்போது, வீடு பூட்டிக்கிடந்ததை கண்டார்.
உடல் மீட்பு
மேலும் வீட்டில் இருந்து தூர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, வீட்டுக்குள் உள்ள அறையில் நசீம்கான் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். மேலும் ரூபினாவும் தலைமறைவாகி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான ரூபினாவை தேடிவருகின்றனர்.