நாகர்கோவில்- மும்பை ரெயிலில் தமிழ் பெண்ணிடம் 8 பவுன் தங்கச்சங்கிலி பறிப்பு

நாகர்கோவில்- மும்பை ரெயிலில் தமிழ் பெண்ணிடம் 8 பவுன் தங்கச்சங்கிலியை திருடன் பறித்து சென்றான்.;

Update:2023-04-11 00:45 IST

மும்பை, 

நாகர்கோவில்- மும்பை ரெயிலில் தமிழ் பெண்ணிடம் 8 பவுன் தங்கச்சங்கிலியை திருடன் பறித்து சென்றான்.

பெண் பயணியிடம் நகை பறிப்பு

தானே மாவட்டம் கல்யாண் கிழக்கு காவோி கிருஷ்ணா குடியிருப்பை சேர்ந்தவர் சக்தி(வயது34). இவர் சமீபத்தில் பங்குனி உத்திர திருவிழாவுக்காக குடும்பத்துடன் சொந்த ஊரான நெல்லை சந்திப்பு டவுண் பகுதிக்கு சென்றார்.

திருவிழா முடிந்து நேற்று முன்தினம் அவர் நெல்லையில் இருந்து மும்பைக்கு நாகர்கோவில்- மும்பை ரெயிலில் (வண்டி எண்:16352) புறப்பட்டார். நேற்று அதிகாலை 6 மணியளவில் ரெயில் ராய்சூர் தாண்டி எடல்புர் அருகே வந்து கொண்டு இருந்தது. சக்தி உள்பட பெரும்பாலான பயணிகள் தூங்கிக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென மர்ம நபர் சக்தியின் கழுத்தில் கிடந்த 2 தங்கச் சங்கிலிகளை பறித்து கொண்டு ஓடினார். சக்தி திருடன், திருடன் என சத்தம் போட்டார்.

அவரின் சத்தம் கேட்டு மற்றொரு பயணி நகைப்பறிப்பு திருடனை துரத்தினார். ஆனால் திருடன் 8 பவுன் தங்கச்சங்கிலியுடன் ஓடும் ரெயிலில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டான்.

பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்

இதையடுத்து சக்தி சம்பவம் குறித்து ரெயில் டிக்கெட் பரிசோதகரிடம் புகார் அளித்தார். பின்னர் அவர் சோலாப்பூர் வந்தவுடன் ரெயில்வே போலீசில் புகார் அளித்தார். ரெயில்வே போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பை- தமிழக ரெயில்களில் அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதன் காரணமாக சொந்த ஊரைவிட்டு மும்பைக்கு வந்து கடுமையாக உழைத்து சம்பாதித்த நகை, பணத்தை அப்பாவி தமிழர்கள் பறிகொடுத்து வருகின்றனர். எனவே மும்பை - தமிழக ரெயில்களில் இனிமேலும் ெகாள்ளை சம்பவங்கள் நடக்காத வகையில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என மும்பையை சேர்ந்த தமிழர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்