தவறி விழுந்து வாலிபர் பலி: போலீசுக்கு தெரியாமல் உடலை தகனம் செய்த கடை உரிமையாளர் மீது வழக்கு
தவறி விழுந்து பலியான வாலிபரின் உடலை போலீசாருக்கு தெரியாமல் சொந்த ஊருக்கு அனுப்பி தகனம் செய்த கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.;
மும்பை,
தவறி விழுந்து பலியான வாலிபரின் உடலை போலீசாருக்கு தெரியாமல் சொந்த ஊருக்கு அனுப்பி தகனம் செய்த கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
வாலிபர் பலி
உல்லாஸ் நகரில் மர சாமான் கடையில் வேலை பார்த்து வந்தவர் சஞ்சீவ் ஹரிராம். இவர் கடந்த ஜூன் மாதம் 10-ந் தேதி கடையின் கூரையில் தார்பாய் போட ஏறினார். அப்போது தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். கடை உரிமையாளர் தொழிலாளியின் மரணம் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கவில்லை.
மேலும் அவர் போலி இறப்பு சான்றிதழ், போலீஸ் தடையில்லா சான்றிதழ் தயார் செய்து வாலிபரின் உடலை அவரது சொந்த ஊரான உத்தரபிரதேசத்துக்கு அனுப்பி வைத்தார். மேலும் அங்கு வாலிபரின் உடல் தகனமும் செய்யப்பட்டது.
உரிமையாளர், சகோதரர் மீது வழக்கு
இந்த சம்பவம் குறித்து சமீபத்தில் தொண்டு நிறுவனத்துக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் தொழிலாளியின் உடல் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது தொடர்பாக உல்லாஸ் நகர் போலீசில் புகார் அளித்தனர்.
இந்த புகார் குறித்து உல்லாஸ்நகர் போலீசார், வாலிபரின் மரணத்தை மறைத்து போலி ஆவணங்கள் மூலம் அவரின் உடலை எடுத்து தகனம் செய்த வழக்கில் மரச்சாமான் கடை உரிமையாளர் கம்லேஷ், பலியான வாலிபரின் சகோதரர் அங்குஷ், ஆம்புலன்ஸ் டிரைவர் அபிஷேக் திவாரி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.