ஆயத்த ஆடை நிறுவனங்களில் பயங்கர தீ; பெண் பரிதாப சாவு
தாராவி ஆயத்த ஆடை நிறுவனங்களில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி பெண் உயிரிழந்தார். அங்கிருந்த பொருட்கள் எரிந்து நாசமானது.;
மும்பை,
தாராவி ஆயத்த ஆடை நிறுவனங்களில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி பெண் உயிரிழந்தார். அங்கிருந்த பொருட்கள் எரிந்து நாசமானது.
தீ விபத்து
மும்பை சயான் ரெயில் நிலையம் அருகே தாராவியின் 90 அடி சாலை சந்திப்பு பகுதியில் அசோக் மில் காம்பவுண்ட் உள்ளது. இந்த காம்பவுண்ட் பகுதியில் 2 மாடி கொண்ட ஆயத்த ஆடை தயாரிக்கும் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. நேற்று காலை 11 மணி அளவில் அங்குள்ள ஆயத்த ஆடை நிறுவனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதனால் அங்கு பணியில் இருந்த தொழிலாளிகள் பதறியடித்தப்படி வெளியேறினர். துணி பண்டல்களில் தீ பற்றி எரிந்ததால் கரும்புகை அப்பகுதி முழுவதும் சூழ்ந்தது.
குறுகலான தெரு
தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு 4 வாகனங்கள் மற்றும் தண்ணீர் டேங்கர்களுடன் விரைந்து சென்றனர். தீ விபத்து நடந்த இடம் குறுகலான தெரு என்பதால் தீயணைப்பு வாகனங்கள் உள்ளே செல்ல முடியவில்லை. மாறாக அருகே உள்ள தெருவில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு அங்கிருந்து தண்ணீர் குழாயை எடுத்து செல்லும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே அங்கு பற்றிய தீ மற்ற ஆயத்த ஆடை நிறுவனங்களுக்கும் பரவியது.
பெண் பலி
அப்போது கீழ் தளத்தில் உள்ள கழிவறையில் ஒரு பெண் சிக்கி தீக்காயமடைந்த நிலையில் கிடந்ததை கண்ட வீரர்கள் அவரை மீட்டு சயான் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கு பற்றிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராடி அங்கு பற்றிய தீயை முற்றிலும் அணைத்தனர்.
இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது பெயர் உஷா லோந்தே (வயது62) என தெரியவந்தது.
பொருட்கள் எரிந்து நாசம்
மேலும் தீ விபத்தில் அங்கிருந்த மின்வயர்கள், பொருட்கள், தையல் எந்திரங்கள் மற்றும் துணி பண்டல்கள் எரிந்து முற்றிலும் நாசமானது.
பரபரப்பாக காணப்படும் அசோக்மில் காம்பவுண்ட் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.