காய்கறி வியாபாரியை மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்த கும்பல்- தானேயில் பயங்கரம்

தானேயில் கொள்ளை முயற்சியில் கும்பல் காய்கறி வியாபாரியை மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்த பயங்கர சம்பவம் நடந்து உள்ளது.;

Update:2022-11-01 00:15 IST

தானே, 

தானேயில் கொள்ளை முயற்சியில் கும்பல் காய்கறி வியாபாரியை மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்த பயங்கர சம்பவம் நடந்து உள்ளது.

காய்கறி வியாபாரி

மும்ரா பகுதியில் வசித்து வந்தவர் சுஜித் ராஜாராம் குப்தா (வயது26). இவர் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் காய்கறி வியாபாரம் செய்யும் தள்ளுவண்டியை எடுக்க அருகில் உள்ள 5 மாடி கட்டிட வளாகத்துக்கு சென்றார்.

அப்போது 3 பேர் கும்பல் அவரிடம் இருந்த பணத்தை பறிக்க முயன்றது. இதையடுத்து வியாபாரி அவர்களிடம் இருந்து தப்பிக்க கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு ஓடினார்.

மாடியில் இருந்து...

இந்தநிலையில் அவரை பின்தொடர்ந்து சென்ற கும்பல் மொட்டை மாடியில் காய்கறி வியாபாரியிடம் இருந்த ரூ.12 ஆயிரத்தை பறித்தது. பின்னர் அவர்கள் வியாபாரியை மொட்டை மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார் காய்கறி வியாபாரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து கொலை, கொள்ளை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்